மயிலாடுதுறைக்கு அரசு மருத்துவக்கல்லூரி விரைவில் கொண்டு வர நடவடிக்கை
மயிலாடுதுறைக்கு விரைவில் அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மயிலாடுதுறைக்கு விரைவில் அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
புதிய கட்டிடம் திறப்பு விழா
மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிய கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிவேதாமுருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியை ரூ.46 ேகாடியே 50 லட்சம் செலவில் தரம் உயர்த்த அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பூமி தொண்டு நிறுவன பங்களிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 65 லட்சம் செலவில புதிதாக கட்டப்பட்ட தொற்றுநோய் சிகிச்சை பிரிவுக் கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
செவிலியர் குடியிருப்பு
மேலும் கொள்ளிடம், அளக்குடியில் ரூ.25 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம், குத்தாலம், கோமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.25 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட செவிலியர் குடியிருப்பு கட்டிடங்களை காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.7.19 கோடி செலவில் ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.6 கோடி செலவில் புதிய மருந்து கிடங்கு அமைக்கப்படும்.
மருத்துவக்கல்லூரி கொண்டு வர நடவடிக்கை
மயிலாடுதுறையில் புதிய மருத்துவக்கல்லூரி கொண்டு வர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி கொண்டு வர தொடர்ந்து மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் வலியுறுத்தி வருகிறார். 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்றவுடன் மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, நகரசபை தலைவர் செல்வராஜ், ஒன்றியக்குழு தலைவி காமாட்சிமூர்த்தி, இணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) குருநாதன், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) குமர குருபரன், முதன்மை தலைமை மருத்துவர் செந்தில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி
பின்னர் அமைச்சர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்பட்டு ரூ.46 கோடியே 50 லட்சம் செலவில் புதிய கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு புதிய பொலிவுடன் செயல்பட உள்ளது. இந்த விழாவில் மொத்தம் 3 மருத்துவக் கட்டிடங்கள் ரூ.4.15 கோடி செலவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார்.