கால்நடை மருத்துவமனை கொண்டு வர நடவடிக்கை


கால்நடை மருத்துவமனை கொண்டு வர நடவடிக்கை
x

முள்வாய் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ஊராட்சிமன்ற தலைவர் ப.பிரேமாபழனி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

முள்வாய் ஊராட்சி

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் முள்வாய் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் முள்வாய், முள்வாய் காலனி, அருந்ததியர் காலனி, இருளர் காலனி உள்ளிட்ட குக்கிராமங்கள் அடங்கி உள்ளது. இந்த ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து தலைவர் ப.பிரேமா பழனி கூறியதாவது:-

குறுங்காடு

நான் தலைவராக பொறுப்பேற்று ஒரு வருடத்தில் முள்வாய் ஊராட்சியில் மேய்க்கால் பகுதியில் 3 ஏக்கர் பரப்பளவில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு குறுங்காடுகள் உருவாக்கப்பட்டு உள்ளது. 100 கே.வி.திறன் கொண்ட மின்மாற்றி மாற்றப்பட்டு உள்ளது. முள்வாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர், ரூ.14 லட்சத்தில் 3 தடுப்பணைகள், முள்வாய் காலனி பகுதியில் ரூ.15 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், ரூ.2.50 லட்சம் மதிப்பில் பள்ளி கட்டிடம், நூலக கட்டிடம் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டத்தின் மூலம் 20 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டு உள்ளது. இதில் 10 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. 10 வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. தனி நபர் கழிப்பிடம் 40 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதில் 25 கழிப்பிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. 15 கழிப்பிடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. ரூ.10 லட்சத்தில் குடிநீர் குழாய்கள் சீரமைப்பு பணிகள், முள்வாய், ஆதிதிராவிடர் காலனி பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலைகள், ரூ.7 லட்சத்தில் நெற்களம் கட்டும் பணி, ரூ.3.50 லட்சத்தில் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சைக்கிள்கள் நிறுத்துமிடம், ரூ.3 லட்சத்தில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள், மக்கும், மக்காத குப்பை தரம் பிரிக்க ரூ.2 லட்சம் மதிப்பில் தொட்டி, ரூ.4 லட்சத்தில் கழிவுநீரை சுத்திகரித்து ஏரிக்கு அனுப்புதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

சொந்த பணத்தில்

முள்வாய் பெரிய ஏரியில் ரூ.44 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. விரைவில் அந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது. முள்வாய் ஊராட்சி மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் அறிந்து அந்த பணிகளுக்கு அரசு நிதி வர காலதாமதம் ஏற்பட்டால் என்னால் முடிந்தவரை எனது சொந்த பணத்தை வைத்து செய்து கொடுத்து வருகிறேன். எனது சொந்த பணத்தில் முள்வாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.15 ஆயிரம் மதிப்பில் குடிநீர் தொட்டி, ஒரு ஆழ்துளை கிணறு, ரூ.30 ஆயிரத்தில் முள்வாய் கிராமத்தில் கால்நடைகள் தண்ணீர் குடிக்க குளம் அமைத்து கொடுத்து உள்ளேன். மாண்டஸ், வர்தா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்தேன். இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பேனா, எழுது பொருட்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வாங்கி கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறேன்.

கால்நடை மருத்துவமனை

ஊராட்சியில் இலவச கண்சிகிச்சை முகாம், கால்நடை மருத்துவ முகாம், பொது மருத்துவ முகாம் உள்ளிட்ட 10-கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு உள்ளது. 150 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டு உள்ளது. இலவச வீட்டுமனை பட்டா வாங்கி கொடுத்து உள்ளேன். ஊராட்சியை பசுமையாக மாற்ற மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது. வருடந்தோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளுக்கு ஏழைகளுக்கு வேட்டி, புடவை வழங்கி வருகிறேன். முள்வாய் ஊராட்சி சிறிய ஊராட்சியாக இருப்பதால் மக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு முன்பாக அந்த குறையை சரிசெய்து கொடுத்து விடுவேன். மேலும் ஊராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை தினமும் நேரடியாக சென்று பார்வையிட்டு அதை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

முள்வாய் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை, சமுதாய கூடம், சிறுபாலம், பேவர்பிளாக் சாலை, தடுப்பணை, கழிவுநீர் கால்வாய், மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி, ஊராட்சி மன்ற அலுவலக சுற்றுசுவர், பொதுக் கழிப்பிட வளாகம் கொண்டு வர கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுத்து உள்ளேன். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஒத்துழைப்போடு அரக்கோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஆர்.தமிழ்ச்செல்வன் ஆலோசனையுடன் அரக்கோணம் ஒன்றியக்குழு தலைவர் நிர்மலாசவுந்தர், துணைத்தலைவர் வீரா என்கிற புருஷோத்தமன், மாவட்ட கவுன்சிலர் அம்பிகாபாபு, ஒன்றிய கவுன்சிலர் சுமதிமுனுசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுகன்யாதுரைபாபு, வார்டு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி, கன்னியம்மாள், ஆறுமுகம், வினோதினி, ரஜினி ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு முள்வாய் ஊராட்சியை முதன்மை ஊராட்சியாக மாற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story