மேட்டூர் உபரிநீர் திட்டத்தில் விடுபட்ட ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை-அரசு உறுதிமொழி குழு தலைவர் தகவல்
மேட்டூர் உபரிநீர் திட்டத்தில் விடுபட்ட ஏரிகளுக்கு தண்ணீர்கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு உறுதிமொழி குழு தலைவர் உதயசூரியன் எம்.எல்.ஏ. தரெிவித்தார்.
ஆய்வுக்கூட்டம்
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழு ஆய்வு கூட்டம் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு குழுவின் தலைவர் உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் அர்ஜூனன், சின்னப்பா, செல்வராஜ், தங்கப்பாண்டியன், மகாராஜன், ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு பிறகு குழுவின் தலைவர் உதயசூரியன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2021-2023-ம் ஆண்டுகளுக்கான அரசு உறுதிமொழிக்குழு சேலம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள திட்டப்பணிகள் மீது தொடர்புடைய துறைகளின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று (நேற்று) பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
கான்கிரீட் தளம்
மாவட்டத்தில் மொத்தம் 221 அரசு திட்டப்பணிகளில் 90 பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. துறையின் பதில்கள் இந்த குழுவிற்கு திருப்தி அளித்ததால் 28 திட்டப்பணிகள் படித்து பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 103 திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இவை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவடையும்.
மேட்டூர் அணையில் 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறப்பின் போது மண் அரிப்பு அதிகமாகி உள்ளது. இதனால் ஆயிரம் மீட்டர் தூரத்திற்கு ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மதிப்பீடு செய்யவும் குழு உத்தரவிட்டுள்ளது.
ரூ.673 கோடியில் மறுமதிப்பீடு
மேட்டூர் உபரிநீரை நூறு ஏரியில் நிரப்பும் திட்டத்தில் 79 ஏரிகள் மட்டுமே தற்போது பயன் அடைந்து வருகின்றன. மீதமுள்ளவை அனைத்தும் குளம் குட்டைகளாகும். எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த தொகுதியில் உள்ள 27 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு சென்றுள்ளார். மேட்டூரில் ஒரு ஏரி மட்டுமே நிரம்பியுள்ளது. மேலும் 22 ஏரிகளுக்கு கொண்டு செல்ல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. உபரிநீர் திட்டம் மூலம் விடுபட்ட ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல ரூ.673 கோடியில் மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு இந்த குழுவும் பரிந்துரை செய்துள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில் பணி தொடங்கிய இடத்தில் இருந்து முடித்துக் கொண்டு சென்றால் தான் பணி நிறைவு பெறும். அனைத்து இடங்களிலும் பள்ளம் தோண்டப்பட்டால் பணிகள் சரிவர இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சதாசிவம் எம்.எல்.ஏ., தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர் கருணாநிதி, துணை செயலாளர் ரவி, பிரிவு அலுவலர் பியூலாஜா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.