தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரிகளை மூட நடவடிக்கை -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரிகளை மூட நடவடிக்கை அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் பல இடங்களில் சட்டப்படியாகவும், சட்டத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளால் மிகப்பெரிய அளவில் மணல் அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. மணல் அரிப்பு காரணமாக விழுப்புரம் அருகே பிடாகம் என்ற இடத்தில் வாகன போக்குவரத்து பாலம், ரெயில்வே பாலம் ஆகியவற்றின் தூண் அடித்தளங்கள் கடுமையாக அரிக்கப்பட்டு வருகின்றன. மணல் குவாரிகள் தான் இத்தனை பாதிப்புகளுக்கும் காரணம் என்று தெரிந்தும் அவற்றை மூட மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளையால் ஏற்படும் மணல் அரிப்பின் காரணமாக பாலங்களின் அடித்தளம் பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களிலும் பிடாகம் பகுதியில் பாலத்தின் தூண்களுக்கு கீழ் கடுமையான மணல் அரிப்பு ஏற்பட்டது. அதை சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து தூண்களின் அடித்தளங்களைச் சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. ஆனால், அடுத்த சில வாரங்களில் மணல் மூட்டைகள் அடித்துச் செல்லப்பட்டு விட்ட நிலையில், மீண்டும் தூண்களுக்கு கீழ் மணலரிப்பு ஏற்படத்தொடங்கியுள்ளது. இது எங்கு போய் முடியும்? என்பது தெரியவில்லை.
அதைத் தடுக்க தென்பெண்ணை ஆற்றில் சட்டப்பூர்வமாகவும், சட்டத்துக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.