பற்களை பிடுங்கிய விவகாரத்தில் தொடரும் அதிரடி: இன்ஸ்பெக்டர்கள் உள்பட மேலும் 6 போலீசார் திடீர் மாற்றம்
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அதிரடி நடவடிக்கையாக 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட மேலும் 6 போலீசாரை திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமசிங்கபுரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மற்றும் போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
உதவி கலெக்டர் முன் ஆஜர்
இந்த சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தி வருகிறார்.
போலீசார் உள்பட 13 பேர் இதுவரை உதவி கலெக்டர் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
சூப்பிரண்டு மாற்றம்
இதற்கிடையே, பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு போலீஸ்காரர் போகபூமன், கல்லிடைக்குறிச்சி தனிப்பிரிவு போலீஸ்காரர் ராஜ்குமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.
தொடர் நடவடிக்கையாக நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி, சென்னை தலைமை இடத்துக்கும், அம்பை உளவுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன், போலீஸ் நிலைய பணிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்கள்.
அதிரடியால் பரபரப்பு
இந்த நிலையில் அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள், கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி ஆகியோர் நேற்று திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்கள்.
இதுதவிர அம்பை தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சக்திநடராஜன், தனிப்பிரிவு போலீஸ்காரர்கள் சந்தனகுமார், மணிகண்டன் ஆகியோரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
இதற்கான உத்தரவை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பிறப்பித்துள்ளார்.
பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக தொடரும் அதிரடி நடவடிக்கைகளால் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
கேமரா காட்சிகள் ஆய்வு
இந்தநிலையில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்தார்.
அந்தந்த போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்.