உள்கட்டமைப்பு வசதிகளுடன் முதன்மை வார்டாக மாற்ற நடவடிக்கை
அரக்கோணம் நகராட்சி 4-வது வார்டை உள்கட்டமைப்பு வசதிகளுடன் முதன்மை வார்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கவுன்சிலர் ச.செந்தில்குமார் தெரிவித்தார்.
வளர்ச்சிப்பணிகள்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சியில் 4-வது வார்டு கவுன்சிலராக அதே பகுதியை சேர்ந்த ச.செந்தில்குமார் உள்ளார். இவர் தி.மு.க. 4-வது வார்டு வட்ட செயலாளராகவும், அரக்கோணம் நகராட்சி வரிமேல்முறையீட்டு குழு உறுப்பினராகவும், அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினராகவும், ஸ்ரீ சாய் சமூக நல அறக்கட்டளை நிறுவனராகவும் இருந்து வருகிறார்.
4-வது வார்டில் செய்து முடிக்கப்பட்டு உள்ள வளர்ச்சி பணிகள் குறித்து கவுன்சிலர் ச.செந்தில்குமார் கூறியதாவது:-
4-வது வார்டுக்குட்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள 8 தெருக்களில் பேவர் பிளாக் ரோடு, 8 தெருக்களில் தார் சாலைகள், எம்.ஆர்.எப். தனியார் தொழிற்சாலையுடன் இணைந்து சி.ஐ.எஸ்.ஆர். திட்டத்தின் மூலம் புதியதாக பொழுதுபோக்கு பூங்கா, எம்.பி. நிதியில் இருந்து உயர்மட்ட மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது.
சாஸ்திரி நகர் பகுதியில் தடையில்லாமல் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சாஸ்திரி நகர் பகுதிகளில் 3 குடிநீர் அடிபம்ப்புகள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ரூ.34 லட்சம் மதிப்பில் பூங்கா சீரமைப்பு, உடற்பயிற்சி கூடம், யோகா மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அறிவு சார் மையம் கட்டும் பணியும் நடந்து வருகிறது. வார்டில் மக்களுக்கு குடிநீர் தங்கு தடையில்லாமல் கிடைக்கவும், கழிவுநீர், குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
365 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடி
வார்டு பொதுமக்களின் நலனுக்காக இருதய பரிசோதனை, கண் சிகிச்சை, பொது மருத்துவம், மாற்றுத்திறனாளி முகாம் நடத்தப்பட்டு உள்ளது. 365 பேர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களும் வழங்கப்பட்டு உள்ளது. தினமும் காலையில் வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று குப்பைகள் சரியாக எடுத்து செல்லப்படுகிறதா?, குடிநீர் சரியாக வழங்கப்படுகிறதா என்று பார்த்து வருவேன். வார்டு பகுதியில் பகுதி சபா கூட்டம் நடத்தி மக்களுக்கு அடிப்படை தேவை என்ன? என்பதை அறிந்து அது குறித்து நகரமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்து அந்த குறையை உடனடியாக தீர்த்து வைப்பேன். எனது சொந்த செலவில் வார்டு பகுதியில் உள்ள மசூதிக்கு சி.சி.டி.வி. கேமரா, அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு உபகரணங்களுடன் கூடிய கைப்பந்து கோர்ட் அமைத்து கொடுத்துள்ளேன். ரேஷன் கடைக்கு கூரை, இருக்கை, பள்ளி மாணவிகள் நின்று செல்ல நிழற்குடை அமைத்து கொடுத்து உள்ளேன். கணேஷ் நகர் 6-வதுகுறுக்கு தெருவில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரிக்கை வைத்துள்ளேன்.
சமூக சேவை
கவுன்சிலராக மட்டுமல்லாமல் சமூக நல அறக்கட்டளை மூலமாகவும் சேவைகள் செய்து வருகிறேன். ஸ்ரீ சாய் சமூக நல அறக்கட்டளை மூலமாக மாற்றுத்திறனாளி முகாம் நடத்தப்பட்டு 35 பேர்களுக்கு, சக்கர நாற்காலிகள், 3 சக்கர சைக்கிள், அன்புகுடில் மூலமாக ஏழைகளுக்கு உடைகள், 3 மாதங்களுக்கு ஒரு முறை எச்.ஐ.வி.நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு நேரத்தில் அரக்கோணத்தை சுற்றியுள்ள திருநங்கைகளுக்கு உணவு, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. நரிக்குறவர், இருளர்களுக்கு மழை, குளிர் காலங்களில் பாய், போர்வை, அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
முதன்மை வார்டாக...
மழை காலங்களில் குடிசைகளில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களுக்கு குடிசை மேல் போடப்படும் தார்ப்பாய் வழங்கி வருகிறோம். மேலும் சமூக அறக்கட்டளை மூலமாக பல்வேறு உதவிகள் செய்து வருகிறேன். சமூக நல அறக்கட்டளையில் உள்ள நிர்வாகிகளின் முழு ஒத்துழைப்போடு இந்த சேவை பணிகளை செய்து வருகிறேன். அரக்கோணம் நகரத்தில் 4-வது வார்டை உள்கட்டமைப்பு வசதிகளுடன் முதன்மை வார்டாக மாற்ற கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஒத்துழைப்போடு அரக்கோணம் நகர தி.மு.க செயலாளர் வி.எல்.ஜோதி ஆலோசனையுடன் நகர மன்ற தலைவர் ப.லட்சுமி பாரி, துணைத்தலைவர் அ.கலாவதி அன்புலாரன்ஸ் மற்றும் வார்டு பொதுமக்களுடன் இணைந்து செயல்படுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.