குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை விரிவு படுத்த நடவடிக்கை
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை விரிவு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் கூறினார்.
நாகர்கோவில்:
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை விரிவு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் கூறினார்.
குறைதீர்க்கும் கூட்டம்
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். இதில் மீனவ பிரதிநிதிகள் ஏராளமாேனார் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.
கூட்டத்தில் மீனவ பிரதிநிதிகள் கூறியதாவது:-
மீனவர்கள் இடையே ஏற்படும் பிரச்சினையை தடுக்க கடலில் ரோந்து படகுகளை அதிகப்படுத்தி பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளுக்கு முழுமையான மானிய விலை மண்எண்ணெய் வழங்க வேண்டும். சில கடலோர கிராமங்களில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அந்ததந்த பகுதிகளில் எரிக்கப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு எற்படுகிறது.
அதிக அளவில் பஸ்கள்
பள்ளம்துறை கீழகிருஷ்ணன்புதூர் பகுதியில் உள்ள கிளை கால்வாயில் மக்களின் நலன் கருதி நடை பாலம் அமைக்க வேண்டும். கடல் சீற்றம் மற்றும் கடல் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காப்பட்டணத்தில் தனியார் துறைமுகம் அமைக்கக்கூடாது.
கடலோர கிராம பகுதிகளில் அதிக அளவில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விளையாட்டு மைதானம்
கடற்கரை கிராமங்களில் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டும்.
கடலில் மாயமாகி பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட இறப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் மாயமான மீீனவரின் குடும்பத்தினர் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறார்கள். எனவே, மாயமான மீனவர்களின் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும்.
இவ்வாறு மீனவ பிரதிநிதிகள் கூறினர்.
சாலைகளை சீரமைக்க நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-
மீனவர்களிடையே ஏற்படும் பிரச்சினையை தடுக்க கடலோர பகுதிகளில் ரோந்து படகுகள் ஏற்கனவே தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேகரிக்கப்படும் குப்பைகள் குடியிருப்பு பகுதிகளில் எரிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கீழ கிருஷ்ணன்புதூர் பகுதியில் உள்ள கிளை வாய்க்காலில் பாலம் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். கடலோரக் கிராமத்தில் உள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடலோர கிராமப் பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டு நடத்துவதற்கு போதுமான இடவசதிகள் இல்லை. இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். மாயமான மீனவர்களுக்கு இறப்பு சான்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குளச்சல் துறைமுகம் விரிவு
மாவட்டத்தில் போதை பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வும் எடுத்து வருகிறார்கள். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் குறித்த தகவல்களை உடனே போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.
கீழ மணக்குடி, மணக்குடி, பள்ளம், பெரியகாடு மீனவர்கள் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் சின்னமுட்டம் சார்ந்த நாட்டுப்படகுகள் நிறுத்தும் இடத்தின் அருகே நிறுத்திடவும், அங்கிருந்து தொழில் புரிந்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை விரிவுபடுத்தி மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம்
நீரோடி, வள்ளவிளை மற்றும் மார்த்தாண்டம்துறையில் தமிழக அரசு சார்பில் ரூ.116 கோடிக்கு நேர்கல் சுவர்களுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்க ஆணை வழங்கப்பட்டு, நேர்கல் சுவர்கள் மற்றும் மீன் ஏலக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தை ஒருங்கிணைந்த மீன்பிடித்துறைமுகமாக மேம்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் இந்த துறைமுகத்தை சுற்றியுள்ள நீரோடி, வள்ளவிளை மற்றும் மார்த்தாண்டம்துறை உள்பட 15 மீனவ கிராமங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, துணை இயக்குனர் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை) காசிநாதபாண்டியன் மற்றும் உதவி இயக்குனர்கள், அரசுத்துறை அலுவலர்கள், மீனவ பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.