அரசு மருத்துவமனைகளில் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை


அரசு மருத்துவமனைகளில் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
x

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

விருதுநகர்

ராஜபாளையம்.

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தடுப்பூசி முகாம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் ஆய்வு ேமற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தடுப்பூசி முகாம் தமிழகத்தில் ஒரு இயக்கமாகவே நடத்தப்பட்டு வருகிறது. 12 லட்சத்து 42 ஆயிரத்து 583 பேருக்கு இன்று (அதாவது நேற்று) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 94.68 சதவீதம் அளவுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2-வது தவணையாக 85.47 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சம் பேர் இதுவரை தடுப்பூசி போடவில்லை.

தலைமை மருத்துவமனை

தற்போது நடைபெற்ற முகாம்களில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதில் 95 சதவீதம் பேர் நலமுடன் உள்ளனர். 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜபாளையம் அரசு மருத்துவமனை ரூ.48 கோடி மதிப்பிலும், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை ரூ.32 கோடி மதிப்பீட்டிலும் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

காலி பணியிடங்கள்

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசால் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்க அனுமதி வழங்கப்படவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியதின் விளைவாக 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விரைவில் எந்தெந்த மாவட்டங்களில் அமைய உள்ளது என்ற பட்டியல் வெளியிடப்படும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தற்போது வரை 79 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். 2025-க்குள் காசநோய் இல்லா தமிழகம் என்ற நோக்கில் டிஜிட்டல் எக்ஸ்ரே வசதியுடன் 23 நடமாடும் வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு பணி

வருமுன் காப்போம் என்ற திட்டம் கடந்த 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அந்த திட்டத்தை உயிர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கல்வி பயிலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்க தேவையான கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. உக்ரைனில் இருந்து திரும்பி வந்த மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயில தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டிட பணிகள் இன்னும் 5 மாதத்தில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story