முந்தல் உப்பளத்தில் 3 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் நடவடிக்கை-அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
முந்தல் உப்பளத்தில் 3 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் நடவடிக்கை-அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
முதுகுளத்தூர்
முந்தல் உப்பளத்தில் 3 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
அமைச்சர் ராஜகண்ணப்பன்
முதுகுளத்தூர் அருகில் அரசு ஆரம்பப் பள்ளி கட்டிடத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பின் தங்கிய மாவட்டமாக உள்ள ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தனி கவனம் செலுத்தி வருகிறார். அதில் ஒரு பகுதியாக முதுகுளத்தூர் தொகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் முதுகுளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட முந்தல் கிராமத்தில் உள்ள உப்பளத்தில் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் நானும், அமைச்சர் தங்கம் தென்னரசும் நேரில் சென்று ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் முதுகுளத்தூரில் மில் தொடங்கப்பட்டு அதில் 1000 மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். முதுகுளத்தூரில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி இதில் கலந்து கொண்ட படித்த இளைஞர்கள் 1700 மேற்பட்டோர் பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டது.
சிறந்த தொகுதியாக மாற்றுவேன்
மேலும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் வைகை தண்ணீர் உபரி நீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் விவசாயிகள் தற்போது நிலங்கள் இருந்த கருவேல மரங்களை அகற்றி அதிக இடங்களை விவசாய களமாக மாற்றி உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக முதுகுளத்தூர் தொகுதியில் எந்த ஒரு திட்டங்களையும், அடிப்படை வசதிகளும் செயல்படுத்தப்பட வில்லை.
தற்போது அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீர், சாலை, போக்குவரத்து, மின்சாரம் வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகிறது. நான் 50 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். முதுகுளத்தூர் தொகுதியை ஒரு சிறந்த தொகுதியாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாரச்சந்தை
இதைத்தொடர்ந்து முதுகுளத்தூர் அருகே உள்ள திருவரங்கம் கிராமத்தில் வாரச்சந்தை அமைக்கும் இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் நவாஸ்கனி எம்.பி., மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமி, முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், ஒன்றிய செயலாளர்கள் பூபதி மணி, ஜெயபால், ஒன்றிய பொறுப்பாளர் ஆறுமுகவேல், ஒன்றிய கவுன்சிலர்கள் நாகஜோதி, ராமர், ராமலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் சூரியகுமார், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, அன்புகண்ணன், இளைஞர் அணி கடலாடி மாரிநாதன், வாகைகுளம் அர்ச்சுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.