அனைவருக்கும் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை
சீர்காழி பகுதியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
சீர்காழி:
சீர்காழி பகுதியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒன்றியக்குழு கூட்டம்
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் தலைமையில் நடந்தது.. துணை தலைவர் உஷாநந்தினி, ஆணையர்கள் இளங்கோவன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன பின்னர் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-
சோனியா காந்தி (தி.மு.க.):- அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ஆதமங்கலம்- கொண்டல் சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வினை நெடுஞ்சாலை துறையினர் எடுக்க வேண்டும்.
வளர்ச்சி பணிகள்
ரீமா(அ.தி.மு.க):- அகனி ஊராட்சியில் சேதமடைந்த நியாய விலைக்கடை கட்டிடத்தை இடித்து விட்ட புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
நடராஜன் (அ.தி.மு.க.):- ஊராட்சிகளில் நடக்கும் கிராம சபை கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களுக்கு ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பது இல்லை. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
தென்னரசு (தி.மு.க.):- தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
விசாகர் (தி.மு.க.):- சட்டநாதபுரம் ஊராட்சியில் துப்புரவு பணிகள் தினம் தோறும் மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயகுமார் (அ.தி.மு.க):-தில்லைவிடங்கன் ஊராட்சியில் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.
நிலவழகி (தி.மு.க.):- தென்னாம்பட்டினம் ஊராட்சியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும்.
நிவாரணம் வழங்க நடவடிக்கை
தலைவர்(கமலஜோதி தேவேந்திரன்):- உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதி ஆதாரத்திற்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும். அதிகாரிகள் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் போது அந்தந்த ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.வரும் கூட்டங்களில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.