சிறப்பு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை
ஊட்டியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், சிறப்பு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
ஊட்டி,
ஊட்டியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், சிறப்பு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
உரத்தின் தரம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு, உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு தகுந்த விவரம் பெற்று 26 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசும்போது கூறியதாவது:-
நடப்பாண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் சிறுதானியங்களை பயிரிட வேண்டும். சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தனியார் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உரத்தின் தரத்தினை ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சிறப்பு திட்டங்கள்
நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மானிய கோரிக்கையின்படி சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தேயிலைக்கான சிறப்பு திட்டங்களை தேயிலை விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக விவசாயிகள் அடங்கிய கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட வன அலுவலர் கவுதம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் கருப்புசாமி, துணை இயக்குனர், பாலசங்கர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்கங்களை சார்ந்த விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.