சாலை, குடிநீர் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை
செம்பனார்கோவில் ஒன்றியத்தில் சாலை, குடிநீர் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தகவல்
பொறையாறு:
செம்பனார்கோவில் ஒன்றியத்தில் சாலை, குடிநீர் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் கூறினார்.
ஒன்றியக்குழு கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது உறுப்பினர்கள பேசியதாவது:-
கொண்டத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை விரைந்து கட்டித்தர வேண்டும். பாகசாலை ஊராட்சி ஆதிதிராவிடர் சுடுகாட்டு சாலை வசதி, இலுப்பூர் ஊராட்சியில் தார்ச்சாலை அமைத்து தர வேண்டும்.
ரேஷன் கடை
விளநகர் கிராமத்தில் சொந்த கட்டிடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும். தில்லையாடி ஊராட்சி நாகப்பன் நகரில் அனைத்து தெருவிற்கும் புதிதாக சாலை அமைத்து தர வேண்டும். முடிகண்டநல்லூர் வண்ணாங்குளத்தில் படித்துறை, நல்லாடை ஊராட்சி பனங்குடி பஸ் நிறுத்தம் அருகே புதிதாக சாலை அமைத்து தர வேண்டும் என கூறினர்.
இதுதொடர்பாக ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், 'தற்போது உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து தேவையான பகுதிகளுக்கு தேவையான பணிகள் நிறைவேற்றப்படும். மேலும் ஒன்றியத்தில் சாலை, குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.