நெல்லை மாநகரில் 10 ஆயிரம் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை-துணை போலீஸ் கமிஷனர் தகவல்
குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் நெல்லை மாநகர பகுதியில் 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாநகர துணை கமிஷனர் சீனிவாசன் கூறினார்.
குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் நெல்லை மாநகர பகுதியில் 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாநகர துணை கமிஷனர் சீனிவாசன் கூறினார்.
கண்காணிப்பு கேமரா
நெல்லை கொக்கிரகுளத்தில் இருந்து பாளையங்கோட்டை சமாதானபுரம் வரை மாநகர காவல்துறை சார்பில் 54 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுப்பாட்டு அலுவலகம் நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் பாலத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது ஏட்டுகள் அருண் ஷோபா, கண்ணன் ஆகியோரை அழைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை இயக்கி வைக்குமாறு அறிவுறுத்தினார்.
பேட்டி
பின்னர் அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு பரிசு, இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஒரு போக்குவரத்து காவலர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்.குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது கட்டாயம் ஆகிவிட்டது. ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டால் 3 போலீசார் பாதுகாப்பு பணியில் நிற்பதற்கு சமம். எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீடு, கடைகள் உள்ளிட்ட இடங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
10 ஆயிரம்
நெல்லை மாநகர பகுதி முழுவதும் 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரும். இதன்மூலம் மாநகரில் குற்ற சம்பவங்கள், போக்குவரத்து விதிமீறல்கள் பெருமளவு குறைக்கப்படும்.
போதை பொருட்கள் குறித்து பொதுமக்கள் 100 என்ற அவசர எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
போலீஸ் பாதுகாப்பு
இன்று (சனிக்கிழமை) மாஞ்சோலை தொழிலாளர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் மாநகர கமிஷனர் அவினாஷ் குமார் தலைமையில் துணை கமிஷனர் சீனிவாசன், சரவண குமார் மேற்பார்வையில் 6 உதவி கமிஷனர்கள், 24 இன்ஸ்பெக்டர்கள், 40 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அஞ்சலி செலுத்த வருவோர் அமைதியான முறையில் காலை 9.15 மணி முதல் மாலை 5.15 வரை மரியாதை செலுத்தி செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.