பயங்கரவாத செயல்கள் இல்லாத மாவட்டமாக திகழ நடவடிக்கை
பயங்கரவாத செயல்கள் இல்லாத மாவட்டமாக திகழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறையினருக்கான பயிற்சியில் கலெக்டர் விசாகன் அறிவுரை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான பயிற்சி முகாம் நடந்தது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி பயற்சியை தொடங்கி வைத்தார். இதில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத், சத்திய மங்கலம் சிறப்பு அதிரடிப்படை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பண்பாளன், தாசில்தார்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் கலெக்டர் விசாகன் பேசுகையில், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், முக்கிய பிரச்சினைகளை கேட்டறிந்து அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கிராமங்களில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, வீடுகட்டும் திட்டம், பல்வேறு சான்றிதழ்கள் வழங்குதல் ஆகியவற்றை தகுதியான நபர்களுக்கு கிடைக்க வேண்டும்.
மேலும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அனைத்து வசதிகளையும் நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் அரசின் மீது நேர்மறையான எண்ணம் மக்களுக்கு ஏற்படும். பயங்கரவாத செயல்கள் இல்லாத மாவட்டமாக திகழ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.