கலைகளை அழியாமல் பாதுகாக்க நடவடிக்கை
நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வு சிறக்க தமிழ்நாட்டு கலைகளை அழியாமல் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் பேசினார்.
விழுப்புரம்:
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் இணைந்து தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டு நினைவு போற்றும் விழாவை விழுப்புரத்தில் நடத்தியது.
விழாவிற்கு தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க தலைவர் காணை சத்தியராஜ் தலைமை தாங்கினார். விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கரதாஸ் சுவாமிகளின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-
கலைகளை பாதுகாக்க நடவடிக்கை
நாட்டுப்புற கலைஞர்களுக்கு பஸ் பயணத்தில் சலுகை உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டுப்புற கலைஞர்கள், கலையில் சிறந்து விளங்குவதுபோன்று, அவர்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி, நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தை தொடங்கினார். அவரது வழியில் வந்த அவரது மகன் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, நாட்டுப்புற கலைகளையும், நாட்டுப்புற கலைஞர்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாட்டுப்புற கலைஞர்களின் கோரிக்கைகளை அரசிடம் எடுத்துரைத்து, அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். பட்ஜெட் கூட்டத்தொடரில் நாட்டுப்புற கலைஞர்களின் நலன் காக்கக்கூடிய அறிவிப்புகளை அரசு நிச்சயம் வெளியிடும். நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வு சிறக்க, தமிழ்நாட்டு கலைகளை அழியாமல் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க மாநில ஆலோசகர் பழனி, மாவட்ட தலைவர் செல்வம், செயலாளர் பெருமாள், பொருளாளர் மாயவன், இசைக்கலை பெருமன்ற மாநில தலைவர் வீரசங்கர், நாட்டுப்புற கிராமிய கலைஞர் நலச்சங்க மாநில தலைவர் மதுரை சோமசுந்தரம், தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க மாவட்ட துணைச்செயலாளர் செந்தில், மாவட்ட பொதுச்செயலாளர் சிவபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பம்பை உடுக்கை சங்க தலைவர் பாலு நன்றி கூறினார்.