கூடுதல் வாடகை வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை
நெல் அறுவடை எந்திரத்துக்கு கூடுதல் வாடகை வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
வேதாரண்யம்:
நெல் அறுவடை எந்திரத்துக்கு கூடுதல் வாடகை வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
வேதாரண்யத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தலைமை தாங்கினார். தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
காளிதாசன்:- நெல் அறுவடை எந்திரத்துக்கு கூடுதல் வாடகை வசூல் செய்தை தடுக்க வேண்டும்.
இழப்பீடு தொகை
ஒளிச்சத்திரன்:- எள் சாகுபடிக்கான இழப்பீடு தொகை இதுவரை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. புகையிலைக்கான மாற்றுப்பயிர் சாகுபடிக்கு வழிகாட்ட வேண்டும்.
பாலகிருஷ்ணன்:- காந்திநகர் பகுதியில் மழைக்காலத்தில் வெள்ளம் தேங்குவதை தடுக்க வேண்டும்.
குழந்தைவேலு:- திருத்துறைப்பூண்டி- வாய்மேடு, தென்னடார், ஆயக்காரன்புலம், ஆதனூர் - வேதாரண்யம் வழித் தடத்தில் அரசு பஸ் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
ஆகாய தாமரை செடிகள்
முள்ளியாறு, மானங்கொண்டானாறு, போக்குவாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்றும், வேதாரண்யத்தில் வேளாண் பொறியியல் துறை அலுவலகம் தொடங்கி, அந்த துறை சார்ந்த நலத் திட்டங்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரும்பாலான விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும் .மின் இறைவை பாசனத் திட்டம், நீர் நிலைகள் பராமரிப்பு குறித்தும் கோரிக்கை விடுத்தனர்.கூட்டத்தில், மேகநாதன், காளிதாஸ், அகிலன், ஒளிச்சந்திரன், , சிவஞானம் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.