கவுசிகமா நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை
கவுசிகமா நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.
கவுசிகமா நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.
கவுசிகமா நதி
இதுகுறித்து சூரம்பட்டியை சேர்ந்த ஆற்றல் அரசு உள்ளிட்ட பலர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- விருதுநகர் அருகே உள்ள சின்ன மூப்பன்பட்டியில் கவுசிகமா நதியில் கழிவுநீர் கலப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், பொதுப்பணிதுறை அதிகாரிகள் ஆகியோரிடம் மனுக்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பொது மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதுடன், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத துறை அதிகாரிகள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அரசு ஆஸ்பத்திரி
விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் செயலாளர் காளிதாஸ் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் இங்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தகுந்த ஏற்பாடுகள் இல்லாததால் அவர்களது வாகனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே இதற்கான ஏற்பாடுகள் செய்யும் வரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் இதர ஊழியர்கள் வாகனம் நிறுத்தும் இடத்தில் பொதுமக்களும் தங்கள் வாகனத்தை நிறுத்த அனுமதிக்க வேண்டுமென கோரியுள்ளார்.
பழைய பஸ் நிலையம்
விருதுநகர் மாவட்ட ஓ.பி.எஸ். அணி எம்.ஜி.ஆர். மன்ற அவை தலைவர் முன்னாள் கவுன்சிலர் ஜெயக்கொடி கொடுத்துள்ள மனுவில், விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்னாள் நகர சபை தலைவர் எம்.எஸ்.பி. ராஜா பெயரில் அமைந்துள்ள நிலையில் அந்த பஸ் நிலையத்தின் பெயர் பலகை மிகவும் சேதமடைந்துள்ளதால் பெயர் தெரியாத நிலையில் உள்ளது.
எனவே புதிய பெயர் பலகை வைக்கவும், நகரில் ெரயில்வே பீடர் ரோடு, தெப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையை சீரமைக்கவும், நகராட்சி நிர்வாகத்திற்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்குமாறு கோரியுள்ளார்.
பஸ் வசதி
தேச மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பரத் ராஜா பழைய பஸ் நிலையத்தில் இருந்து கிராம பகுதிகளுக்கு இரவு நேர பஸ்கள் இயக்க வேண்டும் என்றும், நெடுந்தூரத்திலிருந்து வரும் பயணிகளுக்காக பழைய பஸ் நிலையத்தில் தங்கும் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.