ஏலகிரி மலை, ஜவ்வாதுமலையில் மிளகு உற்பத்தி செய்ய நடவடிக்கை
ஏலகிரி மலை, ஜவ்வாதுமலையில் மிளகு உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த வேளாண்மைத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:-
அனைத்து விவசாயிகளும் அறியும் வகையில் பயிர் காப்பீடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மாவட்டத்திற்கு தேவையான காய்கறிகளை நமது மாவட்டத்திலேயே உற்பத்தி செய்வதற்கான பணியை தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்தவகையான காய்கறிகள் நன்கு சாகுபடி ஆகின்றதோ அந்த காய்கறிகளை செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
ஏலகிரி மலை, ஜவ்வாதுமலை பகுதியில் மிளகு உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் பாலா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முருகேசன், துணை இயக்குனர்கள் ராமச்சந்திரன், பாத்திமா, உதவி இயக்குனர் அப்துல்ரஹமான், வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.