கூடுதல் உபகரணங்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை
கூடுதல் உபகரணங்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை
பேரிடர் காலங்களில் உதவுவதற்காக கூடுதல் உபகரணங்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தீயணைப்பு-மீட்பு பணிகள் துறைத்தலைவர் ரவி தெரிவித்தார்.
ஆய்வு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையங்களில் பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைத்தலைவர் பி.கே.ரவி கடலோரப்பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையத்தில் உள்ள பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கூடுதல் உபகரணங்கள்
பேரிடர் காலங்களில் உதவுவதற்காக தேவையான உபகரணங்கள் குறித்து கேட்டறிந்த அவர், கூடுதல் உபகரணங்களும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின் போது மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு, பூம்புகார் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ், சிறப்பு நிலைய அலுவலர் துரைமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பொறையாறு
பொறையாறு அருகே காழியப்பநல்லூரில் உள்ள தரங்கம்பாடி தாலுகா தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்குழு நிலையத்தில் டி.ஜி.பி. ரவி ஆய்வு செய்தார். அப்போது மீட்பு பணியில் உபகரண கருவிகள், தீயணைப்பு வாகனத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட அலுவலர் சரவணபாபு, மாவட்ட உதவி அலுவலர் துரை, தரங்கம்பாடி நிலைய பொறுப்பு அலுவலர் அருண்மொழி மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள், வீரர்கள் உடன் இருந்தனர்.