பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை


பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி பகுதியில் மழையால் சேதம் அடைந்த மின் மோட்டார்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

சீர்காழி பகுதியில் மழையால் சேதம் அடைந்த மின் மோட்டார்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

அமைச்சர்கள் பார்வையிட்டனர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பாதிப்புகளை அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் பார்வையிட்டனர். சீர்காழி அருகே எடமணலில் உள்ள துணை மின் நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-வரலாறு காணாத கனமழையால் மயிலாடுதுறை மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சீர்காழியில் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. சீர்காழி பகுதியில் சீரான மின் வினியோகம் செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பல்வேறு இடங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 துணை மின் நிலையங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. 2,620 டிரான்ஸ்பார்மர்கள் பாதிப்பு அடைந்துள்ளது. இதில் 1,920 டிரான்ஸ்பார்மர்கள் உள்ள இடங்களில் சீரான மின் வினியோகம் நடந்து வருகிறது.

ஆய்வு பணிகள்

163 டிரான்ஸ்பார்மர்கள் அமைந்துள்ள பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது். சீர்காழி பகுதியில் 200 மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. அதில் 120 மின்கம்பங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. 80 மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்படும். இந்த பணிகளை மேற்கொள்ள திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 354 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். விரைவாக மின் வினியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களை தொடர்பு கொண்டு சேத விவரங்களை கேட்டறிந்து வருகிறார். தமிழகத்தில் 14 ஆயிரத்து 400 டிரான்ஸ்பார்மர்களும், 2 லட்சம் மின் கம்பங்களும் இருப்பில் உள்ளது. தற்போது மின்வாரியத்தில் பல்வேறு நிலைகளில் 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. விரைவில் தமிழக முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளுக்கு இழப்பீடு

மழையால் சேதம் அடைந்த மின் மோட்டார்கள் குறித்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.அப்போது ராமலிங்கம் எம்.பி., மாவட்ட கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story