தர்மபுரி மாவட்டத்தில் 5.15 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க நடவடிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் 5.15 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. இதில் விடுபடும் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 16-ந்தேதி நடைபெறும். தர்மபுரி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலம் 5.15 லட்சம் குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள 1.22 லட்சம் பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதால் ரத்த சோகை தடுக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் சுறுசுறுப்பு, அறிவு திறன் மேம்பாடு ஏற்படும். மாவட்டத்தில் தகுதி உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க துறை பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். குடற்புழு நீக்க மாத்திரையின் பயன்கள் குறித்து பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.