விவசாயியின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை


விவசாயியின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை
x

விவசாயியின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுக்கோட்டை

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கொன்னையம்பட்டி ஊராட்சி மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளக்கண்ணு. விவசாயி. இவரது வீட்டிற்கு வழங்கப்பட்ட ஒரு பல்ப் கொண்ட மின் இணைப்பை 6 மாதத்திற்கு முன்பு மின்வாரியம் ரத்து செய்தது. பிறகு புதிதாக மின் இணைப்பு வழங்க வேண்டி உரிய கட்டணத்துடன் விண்ணப்பித்த வெள்ளக்கண்ணு வீட்டிற்கு ஊர் பொதுமக்கள் சிலரின் எதிர்ப்பு காரணமாக இன்று வரை மின் இணைப்பு வழங்காமல் மின்வாரியம் உள்ளது. இதனால் வெள்ளக்கண்ணுவின் குழந்தைகள் படிப்பதற்கும், வீட்டுப்பாடம் எழுதுவதற்கும் முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் அவர்கள் பள்ளி செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதையடுத்து வெள்ளக்கண்ணுவின் வீட்டிற்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில், காரையூர் மின்வாரிய அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம் கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போராட்டம் நடைபெற வில்லை. அதிகாரிகள் போராட்டம் நடத்த இருந்தவர்களை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று கூறினர். இந்தநிலையில், பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் போலீசார் பாதுகாப்புடன் வெள்ளக்கண்ணு வீட்டின் அருகில் இருக்கும் பட்டாதாரர்களின் அனுமதியுடன் மின் கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் வருவாய்துறை, மின்வாரியம், காவல்துறை அலுவலர்கள், கொன்னையம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணை தலைவர் எஸ்.நல்லதம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.குமார், சி.பாண்டியன், தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story