வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வழங்க நடவடிக்கை
ஜோலார்பேட்டையில் வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
கலெக்டர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட சக்கரக்குப்பம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தமிழக அரசு 40 வருடங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் மூலம் இலவச வீடுகள் கட்டிக்கொடுத்தது. தற்போது அந்த குடியிருப்புகள் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு வசிக்கும் பொதுமக்கள் மழை, வெயில் காலங்களில் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே இலவச பட்டா மற்றும் வீடுகள் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி ஆகியோர் சக்கரகுப்பம் பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பு
அப்போது அங்கு வசிக்கும் பொதுமக்கள், 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட குடியிருப்புகள் சேதம் அடைந்து வருவதால் தங்களுக்கு இலவச வீடு வேண்டும் என்றும், இங்குள்ள பலருக்கு வீட்டுமனை பட்டா இல்லாமல் இருந்து வருகிறோம். இதனால் எங்களுக்கு இலவச வீடும், நாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டாவும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதற்கு பதில் அளித்த கலெக்டர் தற்போது வீடு இல்லாதவர்களுக்கு நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் வீடு இல்லாதவர்கள் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் மனு அளிக்கலாம். மேலும் பட்டா இல்லாதவர்கள், இலவச வீடு தேவைப்படுவோர் முறையாக விண்ணப்பம் அளித்தால் துறை ரீதியாக பரிசீலனை செய்து அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையர் பழனி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ம.முத்தமிழ்செல்வி, நகர செயலாளர் ம.அன்பழகன், நகர மன்ற தலைவர் காவியா, துணைத் தலைவர் பெ.இந்திரா பெரியார்தாசன்,வார்டு கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.