அனைத்து வங்கிகள் சார்பில் 1,326 பயனாளிகளுக்கு ரூ.96 கோடி கடன்கள் வழங்க நடவடிக்கை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தகவல்


அனைத்து வங்கிகள் சார்பில்  1,326 பயனாளிகளுக்கு ரூ.96 கோடி கடன்கள் வழங்க நடவடிக்கை  கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தகவல்
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து வங்கிகள் சார்பில் 1,326 பயனாளிகளுக்கு ரூ.96 கோடி கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து வங்கிகள் சார்பில் 1,326 பயனாளிகளுக்கு ரூ.96 கோடி கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.

கடன் வழங்கும் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், இந்தியன் வங்கி சார்பில் 75-ம் ஆண்டு சுதந்திர திருநாள் அமுதபெருவிழா, கிருஷ்ணகிரி மாவட்ட வங்கிகள் இணைந்து நடத்தும் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். செல்ல குமார் எம்.பி, பிரகாஷ் எம்.எல்.ஏ., இந்தியன் வங்கி துணை மண்டல மேலாளர் பழனிகுமார், தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளர் சீராளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

ரூ.96 கோடி கடன்

இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் சார்பாக 75-ம் ஆண்டு சுதந்திர திருநாள் அமுத பெருவிழா நாடு முழுவதும் 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து வங்கிகள் பங்குபெற்ற, வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம் மற்றும் கடன் வழங்கும் விழா நடத்தப்பட்டது. இந்த முகாமில் 1,326 பயனாளிகளுக்கு ரூ.96 கோடி மதிப்பில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் ஒரு பகுதி தொழிற்சாலைகள் நிறைந்ததாகவும், ஒரு பகுதி வேளாண்மை பகுதியாகவும், ஒருசில பகுதிகள் மிகவும் பின்தங்கிய பகுதியாகவும் உள்ளது. பின்தங்கிய பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்த அவர்கள் சுயதொழில் புரிந்திட குறைந்த வட்டியில் கடன் உதவிகள் வழங்க வேண்டும். பொருளாதாரத்தில் ஏழை, எளிய மக்கள் உயர்வதற்கு வங்கிகளுக்கு பொறுப்புகள் அதிகம்.

உதவ வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கடைக்கோடி மலைக்கிராமங்களுக்கு வங்கி மேலாளர்கள் ஒரு குழுவாக சென்று, அவர்களின் வாழ்வாதாரம், சுய தொழில் பற்றியும், 2 ரூபாய், 3 ரூபாய் மற்றும் மீட்டர் வட்டியென தனியாரிடம் கடன் பெற்று கடனிலிருந்து மீளமுடியாமல் இருக்கும் மக்களை பாதுகாக்கும் வகையில் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடனுதவிகள் வழங்க வேண்டும். மேலும், வங்கிகள் கல்வி கடன்களை தகுதியுடையவர்களக்கு தாமதமின்றி வழங்கி, அவர்கள் கல்வி கற்றிட உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், கனரா வங்கியின் மண்டல மேலாளர் ஆனந்த், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) ஈஸ்வரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன் மற்றும் அனைத்து வங்கி மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story