சாத்தனூர் அணையில் இருந்து மார்ச் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பதற்கு நடவடிக்கை


சாத்தனூர் அணையில் இருந்து மார்ச் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பதற்கு நடவடிக்கை
x

சாத்தனூர் அணையில் இருந்து மார்ச் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பதற்கு அரசாணை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் விவவசாயிகளிடம் கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.

திருவண்ணாமலை

சாத்தனூர் அணையில் இருந்து மார்ச் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பதற்கு அரசாணை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் விவவசாயிகளிடம் கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.

விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம்

சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பது குறித்து திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நீர்வளத்துறையின் சார்பில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பது குறித்து விவசாயிகளிடம் கருத்துகள் அவர் கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 118.75 அடியாக உள்ளது. தற்போதைய கொள்ளளவு 7,264 மில்லியன் கன அடி ஆகும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு மார்ச் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பது குறித்து இக்கூட்டத்தின் மூலம் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தண்ணீர் திறப்பதற்கு அரசாணை பெறுவதற்காக கருத்துரு அனுப்பப்பட்டு உத்தரவு பெற்ற பின்னர் சாத்தனூர் அணையின் வலது மற்றும் இடதுபுற கால்வாயிலிருந்து விவசாய பாசனத்திற்காக 90 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும்.

இனி வரும் காலங்களில்...

பாசனத்திற்காக தண்ணீர் திறப்பதன் மூலம் திருக்கோவிலூர் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டில் 5 ஆயிரம் ஏக்கரும், சாத்தனூர் இடதுபுறக் கால்வாய் மூலம் திருவண்ணாமலை மற்றும் தண்டராம்பட்டு வட்ட ஆயக்கட்டில் 17 ஆயிரத்து 641 ஏக்கரும், திருக்கோவிலூர் தாலுகா ஆயக்கட்டில் 6 ஆயிரத்து 353 ஏக்கரும், சாத்தனூர் வலதுபுறக்கால்வாயில் தண்டராம்பட்டு வட்டத்தில் ஆயக்கட்டு பரப்பில் 1,818 ஏக்கரும், சங்கராபுரம் வட்டத்தில் ஆயக்கட்டு பரப்பில் 19 ஆயிரத்து 182 ஏக்கர் பாசன வசதி பெறும்.

மேலும் நீர்வரத்து, நீர் இருப்பிற்கேற்ப கூடுதலான நாட்களுக்கு தண்ணீர் திறப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இனிவரும் காலங்களில் ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை போதிய அளவு நீர் இருப்பின் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் செயற்பொறியாளார் சண்முகம், வேளாண்மை இணை இயக்குநர் அரக்குமார், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story