சிறுவாணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையை அகற்ற நடவடிக்கை


சிறுவாணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையை அகற்ற நடவடிக்கை
x
தினத்தந்தி 8 May 2023 1:00 AM IST (Updated: 8 May 2023 8:30 PM IST)
t-max-icont-min-icon

கேரள அரசு சார்பில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

கோவை

கேரள அரசு சார்பில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

வளர்ச்சி பணிகள்

கோவை வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் ஆகிய பகுதிகளில் ரூ.860.80 கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, வெள்ளலூர் பேரூராட்சியில் ரூ.75 லட்சத்தில் கட்டப்பட்ட வாரச்சந்தை திறப்பு உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கோவை வ.உ.சி. மைதானத்தில் நேற்று காலையில் நடந்தது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, பேரூராட்சிகள் இயக்குனர் கிரண் குராலா, கலெக்டர் கிராந்திகுமார், மேயர் கல்பனா, ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு வளர்ச்சி திட்டங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது கூறியதாவது:-

அடுத்த மாதம் சோதனை ஓட்டம்

கோவை மாவட்டத்தில் ரூ.1,010.19 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள், சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாதிரி சாலை அமைத்தல், சாலையில் தேங்கும் மணல் குப்பையை அகற்றும் வாகனங்களை வழங்குதல், திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக 105 இலகுரக வாகனங்கள், பெரிய நெகமம் பேரூராட்சியில் 19 பேருக்கு பணி ஆணை வழங்குதல், நமக்கு நாமே திட்டத்தில் அறிவியல் பூங்கா பணி, செல்வாம்பதி, கிருஷ்ணாம்பதி, குமாரசாமி குளங்களை புனரமைத்தல் பணி, நஞ்சுண்டாபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு ஆகியவை தற்போது தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.200 கோடியில் சாலை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு வருகிறது. சாலை அமைக்கும்போது சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் அமைத்து சாலை அமைக்கப்படும். பில்லூர் 3-வது குடிநீர் திட்ட பணிகள் அடுத்த மாதம்(ஜூன்) முடிவுற்று சோதனை ஓட்டம் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

அமைச்சர் செந்தில்பாலாஜி பேசும்போது, கடந்த காலங்களில் போடப்படாத சாலை பணிகளை, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த 2 ஆண்டுகளில் நிறைவேற்றி கொடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மாநகராட்சி பகுதியில் விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு பணிகள் முடிவுற்ற பிறகு உடனடியாக சாலை அமைக்க நிதி வழங்க அரசு தயாராக இருக்கிறது என்றார்.

தடுப்பணையை அகற்ற நடவடிக்கை

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மக்களுக்கு குடிநீர் வழங்கி வரும் சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக கேரள அரசுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். அதுபோன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் பேசி வருகிறார்.

ஆழியாறு அணையில் இருந்து குடிநீர் எடுக்க போடப்பட்டு உள்ள ஒப்பந்தத்தை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளதை அகற்ற கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே சட்டமன்றத்தில் தெரிவித்து இருந்தார். அதை செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர்கள் மீனாலோகு, இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன் மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் மற்றும் முன்னாள் எம்.பி. நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை ஆணையாளர் ஷர்மிளா நன்றி கூறினார்.



Next Story