தேயிலை தோட்டங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை
ஜக்கனாரை ஊராட்சிக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜமாபந்தியில் சப்-கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோத்தகிரி
ஜக்கனாரை ஊராட்சிக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜமாபந்தியில் சப்-கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஜமாபந்தி
கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தலைமையில் ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. இதில் முதல் நாளில் கீழ்க்கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட கிராம மக்களிடம் இருந்து 22 மனுக்களும், 2-வது நாளில் நெடுகுளா வட்டத்திற்கு உட்பட்ட கிராம மக்களிடம் இருந்து 90 மனுக்களும், 3-வது நாளான இன்று கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட கிராம மக்களிடம் இருந்து 161 மனுக்களும் பெறப்பட்டன. 3 நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தி முகாமில் மொத்தம் 273 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று ஜக்கனாரை ஊராட்சி மன்றம் சார்பில் அதன் தலைவர் சுமதி சுரேஷ், சப்-கலெக்டரிடம் ஊராட்சிக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
வருவாய் இழப்பு
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் ஜக்கனாரை ஊராட்சிக்கு சொந்தமான பல ஏக்கர் தேயிலைத்தோட்டங்கள் கேசலாடா மற்றும் பன்னீர் கிராமங்களில் உள்ளன. இந்த தேயிலை தோட்டங்களின் பெரும்பாலான பகுதிகளை அருகில் உள்ள தனியார் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ஊராட்சியின் சொத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன், வருவாய் இழப்பு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே நில அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாசில்தாரிடம் நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்ாவறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நடவடிக்கை
மனுவை பெற்றுக்கொண்ட சப் கலெக்டர் உடனடியாக நில அளவை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்த முகாமில் வருவாய்த்துறை, பேரூராட்சி, ஊராட்சி, வனத்துறை, காவல்துறை, கூட்டுறவுத்துறை, மின் வாரியம் உள்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.