ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை-சிவகாசி ஆர்.டி.ஓ. உறுதி
ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகாசி ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளார்.
சிவகாசி
ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகாசி ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளார்.
சாலை பாதுகாப்பு குழு கூட்டம்
சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கோட்ட அளவிலான சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் தலைமை தாங்கினார். தாசில்தார் ஆனந்தராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ப்ரீத்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரி நாதன், சிவகாசி டவுன் இன்ஸ்பெக்டர் சுபகுமார், ராஜபாளையம் இன்ஸ்பெக்டர் ராஜா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லட்சுமணன், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம் உள்பட பலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சிவகாசி பகுதியில் சாலைகளில் மாடுகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகவும், இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் காயம் அடையும் நிலை தொடர்வதா கவும் புகார் கூறப்பட்டது. இதற்கு ஆர்.டி.ஒ. விஸ்வநாதன் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளை பிடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கு முன்னதாக மாடுகளில் உரிமையாளர்கள் மாடுகளை தங்களது பாதுகாப்பில் வளர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுவார்கள் என்று கூறினார்.
ஆக்கிரமிப்பு
போக்குவரத்து இடையூறாக வைக்கப்படும் பேனர்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. உறுதி அளித்தார். சிவகாசி முருகன் கோவில் பகுதியில் இருந்து திருத்தங்கல் ரெயில்வே கேட் வரை பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ஆர்.டி.ஓ. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை அனுப்பி உரிய ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் உறுதி செய்யப்பட்டால் அதனை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.