தமிழகம் முழுவதும் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை புதுப்பிக்க நடவடிக்கை அமைச்சர் முத்துசாமி தகவல்
தமிழகம் முழுவதும் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி கூறினார்.
சூரமங்கலம்,
அமைச்சர் முத்துசாமி
தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் எம்.பி.க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ் மற்றும் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆகியோர் நேற்று சேலம் ரெயில்வே கோட்ட மேலாளரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு சாஸ்திரிநகர் பகுதியில் சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் சுமார் 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அந்த இடத்தில் கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளன. தற்போது ெரயில்வே பணிகளுக்காக அந்த இடத்தை ெரயில்வே நிர்வாகம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக தெரிகிறது. அந்த இடத்தை அங்குள்ள குடியிருப்பு வாசிகள் விலைக்கு வாங்கிக்கொள்ள தயாராக உள்ளனர். அவர்களை பாதிக்காத வகையில் ெரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளேன்.
வீட்டுவசதி வாரிய குடியிருப்பு
தமிழ்நாடு வீட்டு வசதி துறை சார்பில் தற்போது ரூ.53 கோடிக்கு வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதனை தகுதி உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் பழுதான வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை இடித்துவிட்டு புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவை தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.
இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.