விரிசல் ஏற்பட்ட 50 வீடுகளை சரிசெய்ய நடவடிக்கை
நீலகிரி மாவட்டத்தில் விரிசல் ஏற்பட்ட 50 வீடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் விரிசல் ஏற்பட்ட 50 வீடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
மழையால் பாதிப்பு
ஊட்டி அருகே நஞ்சநாடு, இத்தலார் ஊராட்சிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கல்லக்கொரை முதல் பி.மணிஹட்டி சாலை, இத்தலார் முதல் குந்தா சாலையில் சேதமடைந்த பகுதிகளில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
மேலும் அம்மன்ஹட்டி பகுதியில் விரிசல் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதைதொடர்ந்து அமைச்சர் கா.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரூ.50 கோடிக்கு சேதம்
கூடலூர், தெய்வமலையில் ஏற்பட்டு உள்ள விரிசலை புவியியல் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்றி விட்டு, அவர்களுக்கு மாற்றிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இதுவரை ரூ.50 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டு உள்ளது.
விரிசல் ஏற்பட்ட 50 வீடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தை ராஜ், குந்தா தாசில்தார் இந்திரா உடனிருந்தனர்.