கொரடாச்சேரி ஒன்றியத்தில் ரூ.15 கோடியில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை
கொரடாச்சேரி ஒன்றியத்தில் ரூ.15 கோடியில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை
கொரடாச்சேரி ஒன்றியத்தில் ரூ.15 கோடியில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
ஒன்றியக்குழு கூட்டம்
கொரடாச்சேரி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் அதன் துணைத்தலைவர் பாலச்சந்திரன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமரன், பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரவீன்குமார் தீர்மானங்களை படித்தார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். இதன் விவரம் வருமாறு:-
நாகூரான் (அ.தி.மு.க.): உத்தரங்குடி ஊராட்சியில் மயான சாலை அமைக்க வேண்டும். வளவனூர் வாய்க்காலில் கல்வெட்டு அமைக்க வேண்டும். அபிவிர்த்தீஸ்வரம் ஆதி திராவிடர் தெரு, பத்தூர் படித்துறை வேண்டும்.
ஏசுராஜ் (அ.தி.மு.க.): வண்டாம்பாலை மயானசாலை, பெரும் புகழூர் ரேஷன் கடை பழுதடைத்துள்ளதை சீரமைக்க வேண்டும்.
வாசு (தி.மு.க.): காட்டூர் சமுதாயகூடம் பழுதடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும்.
மயான கொட்டகை
சண்முகசுந்தரம் (தி.மு.க.): ஓச்சேரியில் மயான கொட்டகை அமைக்க வேண்டும். ஆனந்த் (தி.மு.க.): அரசமங்கலம், லிங்கதிடல் மயான கொட்டகை அமைக்க வேண்டும். அரசமங்கலத்திலிருந்து பயித்தஞ்சேரி சாலைவரை தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
கவிதா (இ.கம்யூ) : மாணவர்கள் நலன் கருதி அத்திசோழமங்கலத்திலிருந்து திருவாரூர் வரை பஸ் வசதி செய்து தர வேண்டும்.
மீரா (அ.தி.மு.க.) : மேலராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஓட்டு கட்டிடம் இடிந்துள்ளது. காவாலக்குடி வடக்குத்தெருவில் தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
உமாமகேஸ்வரி (தி.மு.க.): தாழைக்குடி நூலகத்திற்கு நிரந்தர பணியாளர் நியமனம் செய்யப்பட வேண்டும். மாணவர்கள் நலன் கருதி தாழக்குடியிலிருந்து அம்மையப்பனுக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும்.
ரூ.15 கோடியில் சாலைகள் சீரமைப்பு
துணைத்தலைவர்: கொரடாச்சேரி ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகளை அரசிடமிருந்து, பெரும் நிதிகளை வைத்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றியத்தில் ரூ.15 கோடி மதிப்பில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டு வருகிறது. பணிகளை அனைவரும் ஆய்வு செய்ய வேண்டும். அனைத்துப்பணிகளையும் ஏப்ரல் 30-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.