சேரம்பாடியில் காட்டு யானைகள் உயிரிழப்பை தடுக்க தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்ற நடவடிக்கை
சேரம்பாடியில் காட்டு யானைகள் உயிரிழப்பை தடுக்க தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
பந்தலூர்
சேரம்பாடியில் காட்டு யானைகள் உயிரிழப்பை தடுக்க தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பு
பந்தலூர் அருகே சேரம்பாடி, கண்ணம்பள்ளி, சோலாடி, கோட்டமலை உள்பட பல பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளது. இங்கு காட்டுயானை, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் உலா வந்து செல்லும். மேலும், காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்கள் குடியிருப்புகளை தாக்கி வருகிறது. மேலும், தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை மிதித்து நாசம் செய்து வருகிறது. பந்தலூரிலிருந்து சேரம்பாடி வழியாக கோழிக்கோடு செல்லும் சாலைகளையும் வழிமறித்து வருவது வழக்கம்.
இவ்வாறு காட்டுயானைகள் வனத்தைவிட்டு வெளியேறி ஊருக்குள்ளும் சாலைகளிலும் நுழையும் போது தாழ்வாக செல்லும் மின்கம்பிகளில் தும்பிகைகளும் உடல்களும் பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்து வருகிறது.
மின்கம்பிகளை ஆய்வு
இந்தநிலையை போக்க மின்கம்பிகளை உயர்த்தி கட்டவும், புதியமின்கம்பங்கள் அமைப்பதோடு அந்த பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று மின்வாரிய துறை உயர் அதிகாரிகள் மின்வாரிய துறையினருக்கு உத்தரவிட்டனர். அதன்படி நேற்று சேரம்பாடி மின்வாரியதுறைக்கு உள்பட்ட பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பந்தலூர் உதவிசெயற்பொறியாளர் முத்துகுமார், சேரம்பாடி உதவி மின் பொறியாளர் தமிழ்அரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர். பின்னர் காட்டுயானைகள் மின்கம்பிகளில் சிக்கி இறப்பதை தவிர்க்க மின்வாரிய துறை சார்பில் புதிய மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது. இதேபோல் தாழ்வாக சென்ற மின்கம்பிகளை உயர்த்தி அமைக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.