மோசடி நடந்த குரும்பூர், வில்லிசேரி கூட்டுறவு சங்கங்களில் இருந்து விவசாயிகளின் நகைகளை திருப்பி தர நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் மோசடி நடந்த குரும்பூர், வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள விவசாயிகளின் நகைகளை திருப்பித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மோசடி நடந்த குரும்பூர், வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள விவசாயிகளின் நகைகளை திருப்பித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சிவகாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியார் அம்மாள், கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நானோ யூரியா உரம் தொடர்பாக இப்கோ நிறுவனத்தை சேர்ந்த கள அலுவலர் சக்திவேல், பவர் பாயிண்ட் மூலம் விவசாயிகளுக்கு விளக்கினார். இயற்கை வேளாண்மை குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரி விளக்கி கூறினார்.
நகை மோசடி
தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். அப்போது, குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.30 கோடி அளவுக்கு மோசடி நடந்து உள்ளது. தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், செயலாளர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், இந்த கடன் சங்கத்தில் விவசாயிகள் அடமானம் வைத்த 261 நகை பொட்டலங்கள் மாயமாகி உள்ளன. அந்த நகைகளை வேறு வங்கிகளில் அடகு வைத்து மோசடி செய்து உள்ளனர். அந்த நகைகள் கிடைக்குமா என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். எனவே, விவசாயிகளின் நகைகளை உடனடியாக திருப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோன்று வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் மோசடி பெரிய அளவில் நடந்து உள்ளது. விவசாயிகளின் நகைகளை வாங்கிக் கொண்டு கடன் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர். நகைகளையும் திருப்பி கொடுக்காமல் வட்டி மட்டும் வசூல் செய்து வருகின்றனர். மேலும் தற்போது நகைகளை உடனடியாக திருப்பாவிட்டால் ஏலம் விடுவோம் என மிரட்டி வருகின்றனர். இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, விவசாயிகளின் நகைகளை திரும்ப வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிகளில் ஈடுபடுத்த அனுமதிக்க வேண்டும். விளாத்திகுளம், வேம்பார் பிர்க்காவில் மிளகாய் வற்றல் பயிரிட்டு உள்ளோம். எங்கள் பகுதிக்கு பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. அதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பேசும்போது கூறியதாவது:-
நடவடிக்கை
2020-2021-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு திட்டத்தில் மக்காச்சோளம் பயிருக்கு 12 ஆயிரத்து 633 விவசாயிகளுக்கு ரூ.20 கோடியே 45 லட்சம், உளுந்து பயிருக்கு 37 ஆயிரத்து 122 விவசாயிகளுக்கு ரூ.85 கோடியே 22 லட்சம், கொத்தமல்லி, வாழை மற்றும் வெங்காயம் பயிர்களுக்கு 21 ஆயிரத்து 950 விவசாயிகளுக்கு ரூ.19 கோடியே 13 லட்சம் இழப்பீட்டுத் தொகை காப்பீட்டு நிறுவனத்தால் விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டு உள்ளது. மிளகாய் உள்ளிட்ட மீதமுள்ள பயிர்களுக்கு இன்னும் ரூ.50 கோடி அளவுக்கு காப்பீட்டுத்தொகை வர வேண்டி உள்ளது. இந்த தொகை இந்த மாதத்தில் வந்து விடும்.
இன்று, சிறப்பு முகாம்
குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க மோசடி தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் நகைகளை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு முகாம் நடத்தி விவசாயிகளின் நகைகள் திருப்பி கொடுக்கப்படும். வில்லிசேரியிலும் விவசாயிகளின் நகைகளை ஒரு வாரத்தில் திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்,விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.