நெல்லை மாவட்டத்தில் 3 இடங்களில் விபத்து சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை -கலெக்டர் தகவல்
நெல்லை மாவட்டத்தில் 3 இடங்களில் விபத்து சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாலை பாதுகாப்பு கருத்தரங்கில் கலெக்டர் விஷ்ணு கூறினர்.
நெல்லை மாவட்டத்தில் 3 இடங்களில் விபத்து சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாலை பாதுகாப்பு கருத்தரங்கில் கலெக்டர் விஷ்ணு கூறினர்.
கருத்தரங்கு
நெல்லை கொக்கிரகுளம் அறிவியல் மையத்தில் நுகர்வோர் குடிமை குழு (சி.ஏ.ஜி) சார்பில் சாலை பாதுகாப்பை மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லையில் விபத்துக்களை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நெல்லை -மதுரை நான்கு வழிச்சாலையில் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் அதிக விபத்துக்கள் நடைபெற்று வந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் அங்கு விபத்துகளை தடுக்கும் வகையில் ஒளிரும் கம்பங்கள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்த பகுதி விபத்து இல்லாத ஒரு பகுதியாக மாறி வருகின்றது.
சிகிச்சை மையம்
இன்று தமிழகத்தில் விபத்து நடந்த உடன் 24 மணி நேரத்திலே இன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தின் மூலமாக பல்வேறு உயிர்கள் காக்கப்பட்டு வருகிறது. அதைப்போல 'ட்ராமோ கேர்' என்ற விபத்து சிகிச்சை மையங்கள் நாங்குநேரி, வள்ளியூர், அம்பை ஆகிய 3 இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க பொது செயலாளர் கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். சி.ஏ.ஜி ஆராய்ச்சியாளர் வர்ஷா வாசுகி அறிமுக உரையாற்றினார். மும்பை ஐ.ஐ.டி பேராசிரியர் வேதகிரி, சாலை பாதுகாப்பு மதிப்பீடு பற்றி பேசினார். திருச்சி ஐ.ஐ.டி பேராசிரியர் மோசஸ் சாந்தகுமார், புனே பரிசர் அமைப்பின் முதுநிலை திட்ட ஆலோசகர் சந்தீப் கெய்க்வாட், மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜூ, வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் பேசினார்கள்.
கலந்துரையாடல்
பின்னர் மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர்கள் கலந்துரையாடினர். இதில் மாவட்ட அறிவியல் மைய அதிகாரி எஸ்.எம்.குமார், அறிவியல் அலுவலர் மாரி லெனின், அம்பை செஞ்சிலுவை சங்க செயலாளர் சலீம், ரோட்டரி சங்கம் நயினா முகம்மது, பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகி ஜானகிராம் அந்தோணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்க பொருளாளர் முத்துசாமி நன்றி கூறினார்.