வீடுகளில் நீர் உறிஞ்சு குழாய்கள் அமைக்க நடவடிக்கை அதிகாரிகளுக்கு, அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தல்
குமரி மாவட்டத்தில் வீடுகளில் நீர் உறிஞ்சு குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தினார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் வீடுகளில் நீர் உறிஞ்சு குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தினார்.
ஆய்வு கூட்டம்
குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதோடு ஒவ்வொரு துறையிலும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
வளர்ச்சி பணிகளின் செயலாக்கத்தின் போது ஏற்படும் தடைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் ஏதேனும் தடைகள் மற்றும் இடர்பாடுகள் ஏற்படின் அதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
நீர் உறிஞ்சு குழிகள்
ஒவ்வொரு வீடுகளிலும் நீர் உறிஞ்சு குழிகள் அமைக்கவும், குப்பைகளை உரமாக மாற்றவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. நகராட்சி பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், மீன் சந்தை உள்ளிட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்கவும் வேண்டும். நெடுஞ்சாலைகள் துறை சார்பில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள், பாலப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) விஜயலெட்சுமி, மாநகராட்சி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெள்ளைசாமி ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
---