தஞ்சை-விக்கிரவாண்டி சாலைபணிகளை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை


தஞ்சை-விக்கிரவாண்டி சாலைபணிகளை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை
x

தஞ்சை-விக்கிரவாண்டி சாலைபணிகளை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை

தஞ்சாவூர்

தஞ்சை- விக்கிரவாண்டி புறவழிச்சாலை பணிகளை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தஞ்சையில் ஆய்வு செய்த சட்டமன்ற மனுக்கள் குழு தலைவர் கோவி.செழியன் கூறினார்.

சட்டப்பேரவை மனுக்கள் குழு

தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் தலைமையில் உறுப்பினர்கள் சுந்தரராஜன், பாபு, பொன்னுசாமி, ராதாகிருஷ்ணன் அடங்கிய தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் நேற்று தஞ்சை வந்தனர். பின்னர் அவர்கள் தஞ்சை மாநகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 9 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். காலையில் தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் பகுதியில் உள்ள காடவராயன்குளம் மற்றும் வடிகால் வாய்க்காலை ஆய்வுசெய்தனர்.

அதனைத்தொடர்ந்து சமுத்திரம் ஏரியை ஆழப்படுத்தி நடைபாதை அமைக்கும் பணி நடைபெறுவதையும், நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் உள்ள குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாருவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அண்ணாநகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு சென்று அங்குள்ள மாணவர்கள் குடிநீர் வசதி, கழிவறை வசதி குறித்து கேட்டறிந்தனர்.

அகழி தூர்வாருதல்

அதன் பின்னர் புதிய பஸ் நிலையம், திருவையாறு புறவழிச்சாலை, தஞ்சையை அடுத்த வேலூர் கிராமம், தஞ்சை பெரியகோவில் அகழி தூர்வாருவது குறித்தும் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் சட்டப்பேரவை மனுக்கள் குழுவுக்கு வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், அதன் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள், மனுதாரர்களுடன் ஆய்வு நடத்தினர்.

முன்னதாக சட்டப்பேரவை மனுக்கள் குழு தலைவர் கோவி.செழியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பொதுநலன் குறித்த மனுக்கள் மீது சட்டப்பேரவை மனுக்கள் குழு 9 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறது. இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் மொத்தம் 121 மனுக்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அனைத்து மனுதாரர்களையும் கலெக்டர் அலுவலகத்துக்கு வரவழைத்து, அனைத்து துறை அலுவலர்களிடம் விசாரணை நடத்தவுள்ளோம். நூற்றுக்கு நூறு பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இக்கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

80 சதவீதம் பணிகள் நிறைவு

இந்த ஆய்வில் பொது நலன் குறித்த மனுக்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. கடந்த காலத்தில் நிலுவையில் இருந்த மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சாலை வசதி, குளக்கரை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தூர் வாருதல் உள்ளிட்டவை தொடர்பான கோரிக்கைகள் அதிகமாக உள்ளன. சமுத்திரம் ஏரி கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபாதையுடன் கூடிய மேம்பாட்டு பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் படகு சவாரி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. இது தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து முடிவு செய்யப்படும்.

தஞ்சை- விக்கிரவாண்டி சாலை பணிகள் கடந்த 7ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதில் பழைய ஒப்பந்தக்காரர் நீக்கப்பட்டு புதிய ஒப்பந்தக்காரர் பொறுப்பு ஏற்று பணிகள் நடந்து வருகிறது. சாலை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. பாலங்கள் அமைப்பதற்கான களவேலை நடந்து வருகிறது. அந்த பணிகளையும் ஆய்வு செய்தோம். இதில் தஞ்சை மாவட்டத்தில் புறவழிச்சாலை பணிகளை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது கலெக்டர் தீபக் ஜேக்கப், கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், சட்டப்பேரவை மனுக்கள் குழு செயலர் சீனிவாசன், துணை செயலாளர் கணேசன், டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story