ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்த நடவடிக்கை
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் கூறினார்.
நாகர்கோவில்:
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் கூறினார்.
2 நாள் ஆய்வு
தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுத்தலைவர் அன்பழகன் தலைமையில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள் கடந்த 2 நாட்கள் குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றனர்.
2-வது நாளான நேற்று நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை மதிப்பீட்டுக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காசநோய் பிரிவில் சென்று அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தனர். ரத்த சேமிப்பு கிடங்கையும் ஆய்வு செய்ததோடு அங்கு எத்தனை யூனிட் ரத்தம் இருப்பு உள்ளது? மாதம் எவ்வளவு யூனிட் ரத்தம் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது? என்ற விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
குறைபாடுகள்
பின்னர் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் கொட்டாரம் அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது மாணவர்கள் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தை விளையாட்டு மைதானத்திற்கு பயன்படுத்த ஆவணம் செய்ய வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மணக்குடி பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு உட்பட்டு முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.17 கோடியில் மாணவ, மாணவிகள் விடுதி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அந்த பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இதேபோல் நரம்பியல் சிகிச்சை மையம் ரூ.10 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஆஸ்பத்திரியில் சில குறைபாடுகள் உள்ளதாக தெரிவித்துள்ள னர். அந்த குறைபாடுகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆஸ்பத்திரியை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு
இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் முன்னிலையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுகளின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் எஸ்.காந்தி ராஜன், ராஜேஷ் குமார், சந்திரன், சிந்தனை செல்வன், சிவகுமார், தளபதி, பரந்தாமன், பூமிநாதன், நாகர்கோவில் எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், மாவட்ட வன அதிகாரி இளையராஜா, மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை டீன் பிரின்ஸ் பயஸ், உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப்பிரமணியன், சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.