மாணவிகள் முன்பு சட்டையை கழற்றிய வாலிபர் மீது நடவடிக்கைபோலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேட்டி


மாணவிகள் முன்பு சட்டையை கழற்றிய வாலிபர் மீது நடவடிக்கைபோலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேட்டி
x

பார்வதிபுரம் மேம்பாலத்தில் மாணவிகள் முன்பு ஆடையை கழற்றிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

பார்வதிபுரம் மேம்பாலத்தில் மாணவிகள் முன்பு ஆடையை கழற்றிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

குமரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 7-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. தேர்வு எழுத வரும் மாணவிகளை ஈவ்டீசிங் செய்யும் சம்பவம் நடைபெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து போலீசார் தேர்வு மையம், முக்கிய இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் தேர்வின் கடைசி நாளான நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டார். டதி, கவிமணி, எஸ்.எல்.பி. பள்ளியில் மாணவிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆடையை கழற்றிய வாலிபர்

தேர்வு சமயத்தில் மாணவிகளுக்கு ஏற்படும் ஈவ்டீசிங் உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுக்கவும், ஒரு சில இடங்களில் காதல் போர்வையில் மாணவிகளை கடத்தும் சம்பவங்கள் நடைபெற்றதாக புகார்கள் வந்தன. இதையடுத்து ஆயுதப்படை முகாமில் உள்ள பெண் போலீசார் கொண்ட அதிவிரைவு படை ஏற்படுத்தப்பட்டது.

ஈவ்டீசிங் உள்ளிட்ட மாணவிகளுக்கு எதிரான சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாகா்கோவில் பார்வதிபுரம் மேம்பால பகுதியில் மாணவிகள் முன்பு வாலிபர் ஒருவர் தனது சட்டையை கழற்றி வீசியபடி அங்குமிங்கும் சென்றுள்ளார்.

இதனை கவனித்த அதிவிரைவு படையை சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஐனா குமாரி, அந்த வாலிபரை பிடித்து எச்சாித்தார். பின்னர் அவரை ஆசாரிப்பள்ளம் போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில், கீரிப்பாறை பகுதியை சேர்ந்த அந்த வாலிபர் பள்ளிவிளையில் வசித்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈவ்டீசிங் செயலில் ஈடுபட்ட வாலிபரை பிடித்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐனா குமாரியின் செயல் பாராட்டுக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story