ஒருவழி பாதையில் செல்லாமல் தடையை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை


ஒருவழி பாதையில் செல்லாமல் தடையை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

லெட்சுமாங்குடியில் ஒருவழி பாதையில் செல்லாமல் தடையை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

லெட்சுமாங்குடியில் ஒருவழி பாதையில் செல்லாமல் தடையை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

முக்கிய வழித்தடம்

கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடி சாலை உள்ளது. இந்த சாலை திருவாரூர், மன்னார்குடி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, நாகை, நாகூர், காரைக்கால், மயிலாடுதுறை போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும்.

இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி,கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.

போக்குவரத்து நெரிசல்

இந்த நிலையில் லெட்சுமாங்குடி கடைவீதி சாலை மிகவும் குறுகலான சாலை என்பதால், எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அவசர நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அவசரமாக வேலைக்கு செல்வோர், கடைவீதி மற்றும் ஏனைய இடங்களுக்கு சென்று வருவோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பல்வேறு சிரமங்களை அடைந்து வந்தனர்.

இதனால், லெட்சுமாங்குடி சாலையை ஒரு வழி பாதையாக மாற்ற வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஒருவழி பாதை

இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு லெட்சுமாங்குடி சாலையில் திருவாரூரில் இருந்து வரும் வாகனங்கள், கூத்தாநல்லூர் அப்துல்ரகுமான் சாலையில் சென்று, லெட்சுமாங்குடி பாலத்தை கடந்து மன்னார்குடி மார்க்கமாக செல்லும் வகையிலும், மன்னார்குடியில் இருந்து வரும் வாகனங்கள், லெட்சுமாங்குடி கடைவீதி சாலை வழியாக திருவாரூர் மார்க்கம் செல்லும் வகையிலும் ஒரு வழி பாதையாக அமைக்கப்பட்டது. அதன்படி, வாகனங்கள் ஒரு வழி பாதையில் சென்று வருகின்றன. போக்குவரத்து போலீசார் ஒரு வழி பாதையில் வாகனங்கள் சென்று வருவதை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக ஒரு வழி பாதையில் செல்லாமல் ஒரு சில வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி லெட்சுமாங்குடி கடைவீதி வழியாக செல்கின்றனர். இதன் காரணமாக கடைவீதி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தடையை மீறும் வாகன ஓட்டிகள்

ஒரு வழி பாதையில் செல்லாமல் தடையை மீறி செல்லும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், தினமும் அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை அனைத்து வாகனங்களும் ஒரு வழி பாதையிலேயே செல்வதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story