அனுமதி இன்றி ஏரியில் பள்ளம் தோண்டியவர்கள் மீது நடவடிக்கை


அனுமதி இன்றி ஏரியில் பள்ளம் தோண்டியவர்கள் மீது நடவடிக்கை
x

அப்துல்லாபுரம் ஏரியில் 3 சிறுவர்கள் மூழ்கி பலியான சம்பவத்தில் ஏரியில் அனுமதியின்றி பள்ளம் தோண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் பெற்றோர் மனு அளித்தனர்.

வேலூர்

அப்துல்லாபுரம் ஏரியில் 3 சிறுவர்கள் மூழ்கி பலியான சம்பவத்தில் ஏரியில் அனுமதியின்றி பள்ளம் தோண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் பெற்றோர் மனு அளித்தனர்.

மக்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 470 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.

பள்ளம் தோண்டியவர்கள் மீது நடவடிக்கை

கூட்டத்தில், வேலூர் அப்துல்லாபுரம் ஏரியில் அதே பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களின் பெற்றோர் அளித்த மனுவில், அப்துல்லாபுரம் ஏரியில் அனுமதியின்றி 20 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அதில், மூழ்கி தான் எங்கள் குழந்தைகள் இறந்துபோனார்கள். அனுமதியின்றி ஏரியில் பள்ளம் தோண்டிய நபர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

காட்பாடியை அடுத்த விண்ணம்பள்ளி கோவிந்தராஜகோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் துண்டுபிரசுரங்களை கையில் ஏந்தியவாறு வந்து அளித்த மனுவில், எங்கள் ஊரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை சிறு தானியங்கள் உலர்த்தும் களமாக பயன்படுத்தி வந்தோம். தற்போது அந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிட பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதனை தடுத்து புறம்போக்கு இடத்தை அளவீடு செய்து வேலி அமைத்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இலவச வீட்டுமனை பட்டா

வேலூரை அடுத்த ஸ்ரீபுரத்தை சேர்ந்த அனுசியா தனது மகளுடன் அளித்த மனுவில், எனக்கு ஊசூரை சேர்ந்த ராஜேஷ்குமாருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், மகள் உள்ளனர். எனது கணவர் கடந்த ஜூன் மாதம் வேறு ஒருபெண்ணை திருமணம் செய்ய இருந்தார். அவர்கள் இருவரையும் நான் பிடித்து வேலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தேன். போலீசார் எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டனர். கடந்த ஆகஸ்டு மாதம் எனது மகளை பள்ளிக்கு அழைத்து சென்றேன். அப்போது அங்கு வந்த அவர் வழிமறித்து செல்போன், ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரியூர் போலீசில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனது கணவர் மீது நடவடிக்கை எடுத்து செல்போன், பணம், திருமணத்தின்போது கொடுத்த சீர்வரிசை பொருட்களை பெற்றுத்தர வேண்டும். அவருடன் உள்ள எனது மகனை மீட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் அளித்த மனுவில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 176 திருநங்கைகள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று மனு அளித்திருந்தோம். அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

பணி நியமன ஆணை

அகில இந்திய கிறிஸ்துவ முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற உள்ளது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கூட்டத்தில் பணியின்போது மரணம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் குமரவேலன் மகளுக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணிநியமன ஆணையை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.


Next Story