சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்த 2 நாளிலேயேமாணவிக்கு சான்றிதழ்களை வழங்கிய தனியார் கல்லூரி நிர்வாகம்


சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்த 2 நாளிலேயேமாணவிக்கு சான்றிதழ்களை வழங்கிய தனியார் கல்லூரி நிர்வாகம்
x
தினத்தந்தி 2 July 2023 12:15 AM IST (Updated: 2 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்த 2 நாளிலேயே மாணவிக்கு சான்றிதழ்களை தனியார் கல்லூரி நிர்வாகம் வழங்கியது.

விழுப்புரம்


தஞ்சாவூர் வெங்கடேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் மகள் ஜெயஸ்ரீ (வயது 26). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சைக்காலஜி படித்து வந்தார். கடந்த 2022-23-ம் கல்வியாண்டில் அம்மாணவி 3-ம் ஆண்டு படிக்கும்போது படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.

இந்நிலையில் அம்மாணவி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தான் படித்த கல்லூரிக்கு சென்று தன்னுடைய படிப்பு மற்றும் மதிப்பெண் சான்றிதழை தருமாறு முறையிட்டார். அதற்கு கல்வி கட்டணத்தை முழுமையாக செலுத்தினால் மட்டுமே சான்றிதழ்கள் வழங்க முடியும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இந்த பிரச்சினை தொடர்பாக ஜெயஸ்ரீ, கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்தார். மனுவின் மீது மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பூர்ணிமாவும் விசாரணை நடத்தினர். அப்போது மனு அளித்த 2 நாட்களிலேயே அந்த தனியார் கல்லூரி நிர்வாகம், மாணவியின் அனைத்து சான்றிதழ்களையும் உடனே ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து அந்த கல்லூரி நிர்வாகம், மாணவியின் அனைத்து சான்றிதழ்களையும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் ஒப்படைத்தது. அதனை தொடர்ந்து மாணவி ஜெயஸ்ரீயை நேற்று வரவழைத்து அவரிடம் அந்த சான்றிதழ்கள் அனைத்தையும் முதலாவது கூடுதல் சார்பு நீதிபதி தமிழ்ச்செல்வன் வழங்கினார்.

சான்றிதழ்களை பெற்றுக்கொண்ட மாணவி ஜெயஸ்ரீ, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கும், மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமாவுக்கும் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக உதவியாளர்கள் புவனேஸ்வரி, ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story