பூம்புகார் சிலப்பதிகார கலைக்கூடத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை
பூம்புகார் சிலப்பதிகார கலைக்கூடத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்
திருவெண்காடு:
பூம்புகார் சிலப்பதிகார கலைக்கூடத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.
சிலப்பதிகார கலைக்கூடம்
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் சரித்திர புகழ்வாய்ந்த சிலப்பதிகார கலைக்கூடம் உள்ளது.இதனை ஒட்டி நெடுங்கள் மன்றம், பாவை மன்றம், இலஞ்சி மன்றம் மற்றும் அழகிய கடற்கரை ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் சிலப்பதிகாரத்தை நினைவுகூரும் வகையில் கடந்த 1973-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாகமுறையாக பராமரிக்கப்படாததால் சிலப்பதிகார கலைக்கூடம் பொலிவிழந்து காணப்படுகிறது. இதனை புதுப்பித்து தர வேண்டுமென சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சீரமைக்க நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் அதன் தலைவர் டி.ஆர்.பி ராஜா தலைமையில் உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செல்லூர் ராஜு, அம்மன் அர்ஜுணன், அருள், அன்பழகன், ஈஸ்வரன், ராமச்சந்திரன், பாலசுப்பிரமணியன் மற்றும் மயிலாடுதுறை ராஜகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் சிலப்பதிகார கலைக்கூடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது குழுவினரிடம் உரிய நிதி ஒதுக்கீடு செய்து சிலப்பதிகார கலைக்கூடத்தை சீரமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை மனு அளித்தனர். இதனைப் பெற்றுக்கொண்ட குழு தலைவர் ராஜா உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், சட்டமன்ற கூடுதல் செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
எருக்கூர் அரிசி ஆலை
இதை தொடர்ந்து கொள்ளிடம் அருகே எருக்கூர் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கடந்த ஆட்சியில் ரூ. 64 கோடி மதிப்பீட்டில் பொருத்தப்பட்ட சைலோ சிஸ்டம் ஏன் செயல்படாமல் உள்ளது குறித்து ஆய்வு செய்தனர்.
டேனிஷ்கோட்டை
பின்னர் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை கொட்டும் மழையிலும் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் பார்வையிட்டனர். அப்போது டேனிஷ் கோட்டை மேல்தளத்தில் உள்ள அருங்காட்சியகம், கீழ்தளத்தில் உள்ள போர் வீரர்கள் தங்கும் அறை, குதிரை லாயம், உணவு தானிய கிடங்கு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். இதையடுத்து சீகன்பால்கு கட்டிய புது எருசலேம் ஆலயம் மற்றும் அவரது கல்லறை ஆகியவற்றை பார்வையிட்டனர்.
ஆய்வு கூட்டம்
இதையடுத்து மயிலாடுதுறை, ஏ.வி.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்டரங்கத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத்துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், அதன் மதிப்பீடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.