போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்


போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
x

போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தெரிவித்தார்.

வேலூர்

வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு

குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. என்.கண்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது குடியாத்தம் துணைக் கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான முக்கிய குற்ற வழக்குகள், கண்டுபிடிக்க முடியாமல் உள்ள முக்கிய வழக்குகள் குறித்து கேட்டறிந்து, முக்கிய குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும், புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராஜேஷ்கண்ணன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு கே.ராமமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக ஐ.ஜி. கண்ணனை இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, பாலசுப்பிரமணியம், செந்தில்குமாரி, நிர்மலா முத்துக்குமார், முகேஷ்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடுமையான நடவடிக்கை

வேலூர் மாவட்ட காவல்துறை முக்கிய குற்ற வழக்குகளில் உடனுக்குடன் துப்புத் துலக்கி சிறப்பாக செயல்படுகிறது. குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். போதைப்பொருள் முற்றிலும் தடுக்கும் பொருட்டு அதை வெளியூர்களில் இருந்து கடத்தி வருபவர்கள், விற்பவர்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து போதைப் பொருட்களை தடுக்க பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தொடர்ந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும், குழுக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் 326 பள்ளி கல்லூரிகளில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் ஒழிக்க

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் யாராவது போதை பொருட்களுக்கு அடிமையானாலோ அது குறித்து புகார் அளித்தாலோ தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆட்படும் மாணவர்களை மீட்டெடுக்க சிறப்பு மறு வாழ்வு மையங்கள் அமைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படும்.

தமிழக முதல்-அமைச்சரின் ஆய்வுக் கூட்டங்களில் போதைப்பொருள் முற்றிலும் இருக்கக் கூடாது என அறிவித்துள்ளார். அதன் பேரில் போதைப் பொருட்கள் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது ஆந்திர மாநில எல்லையில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நமது மாவட்டத்திற்கு வருவதாக தகவல் வருகின்றன. எனவே ஆந்திர காவல்துறை அதிகாரிகள், வேலூர் காவல் துறை அதிகாரிகள் இணைந்து ஆந்திராவில் கஞ்சா விற்பவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் கஞ்சா கடத்தலை தடுக்கவும், அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ரவுடிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சட்டத்தை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்பட்டுள்ளது.

வேலூர் சரகத்தில் விபத்துக்கள் குறைந்துள்ளது. குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் விபத்துக்கள் பெரும் அளவு குறைந்துள்ளது. விபத்துகளை தடுக்க விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து அங்கு ஒளிரும் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story