நடிகர் ஆர்யா கலந்துரையாடல்
நெல்லையில் கல்லூரி மாணவர்களுடன் நடிகர் ஆர்யா கலந்துரையாடல்
நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடந்த விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக நடன நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுடன் இணைந்து நடனமாடினார். உடற்பயிற்சி, ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் சைக்கிள் கிளப்பை தொடங்கி வைத்து மாணவர்களுடன் சைக்கிள் ஓட்டினார்.
பின்னர் மாணவ-மாணவிகளுடன் நடிகர் ஆர்யா கலந்துரையாடினார். இயற்கை வளத்தை பாதுகாப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மரக்கன்று நட்டினார். தேசிய அளவிலான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிப்போட்டியில் முதல் பரிசான ரூ.1 லட்சம் வென்று சாதனை படைத்த சிவில் துறை மாணவர்கள் கார்த்திக் ராஜா, ரொனால்டோ சாம், சுரேஷ் ராஜ், மஞ்சு, ஜெமிமா கிப்டா, மனோஜ் கிஷோர், ஆலோசகர் உதவி பேராசிரியர் சுமில் குமரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மற்றும் சிறந்த இடத்தை பெற்ற மாணவிகள் தர்ஷினி, கலாதேவி, நிவேதிதா, மாணவர்கள் ஜெபின், மாரிசெல்வம், கிளாட்சன் ஆகாஷ் ராஜா, பேராசிரியர் அனிதா ஆகியோரையும் நடிகர் ஆர்யா பாராட்டினார்.
பின்னர் அவர் பேசுகையில், ''மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் தடைக்கற்களை படிக்கட்டுகளாக கருதி முன்னேற வேண்டும்'' என்று கூறினார். மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். நடிகர் ஆர்யாவுக்கு கல்லூரி முதல்வர் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். விழாவில் பொது மேலாளர் கே.ஜெயக்குமார், எஸ்.கிருஷ்ணகுமார், கணினித்துறை இயக்குனர் எம்.முகமது சாதிக், வேலைவாய்ப்புத்துறை டீன் ஞான சரவணன், வளாக மேலாளர் சகாரியா காபிரியேல், பயிற்சித்துறை இயக்குனர் பாலாஜி மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.