பள்ளி பெயர் பலகை மீது ஒட்டப்பட்ட நடிகர் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள்
வேலூரில் பள்ளி பெயர் பலகை மீது நடிகர் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதை தொடர்ந்து அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூரில் பள்ளி பெயர் பலகை மீது நடிகர் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதை தொடர்ந்து அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாழ்த்து போஸ்டர்
வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பள்ளியின் பெயர் பலகை மீது திரைப்பட நடிகர் ஒருவரின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரை ரசிகர்கள் ஒட்டியிருந்தனர். இது பள்ளியின் பெயரை மறைக்கும் வகையில் இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 2-ம் பகுதி செயலாளர் ரீகன் தலைமையில் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதுபற்றி சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் போலீசாரிடம் புகாரும் தெரிவித்தனர்.
சாலைமறியல் போராட்டம்
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பள்ளி சுவர் மீது சினிமா விளம்பர போஸ்டர் ஒட்டக்கூடாது. ஆனால் இங்கு பள்ளியின் பெயர் பலகை மீதே 2 போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை (திங்கட்கிழமை) சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அந்த போஸ்டரை அகற்றினர்.