மதுரை ஐகோர்ட்டில் நடிகர் தனுஷ் வழக்கு விசாரணையைவேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை
மதுரை ஐகோர்ட்டில் நடிகர் தனுஷ் வழக்கு விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டது
மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த தம்பதி கதிரேசன்-மீனாட்சி. இவர்கள், கடந்த 2015-ம் ஆண்டு மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த ஒரு வழக்கில், நடிகர் தனுஷ் எங்கள் மகன் தான். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயம் வீட்டை விட்டு ஓடி விட்டார். தற்போது டைரக்டர் கஸ்தூரிராஜாவின் வளர்ப்பு மகனாக உள்ளார். பெற்றோர் பராமரிப்பிற்காக நடிகர் தனுஷ் எங்களுக்கு உரிய ெதாகையை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு 2017-ம் ஆண்டில் உத்தரவிட்டது.
ஆனால் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை. இதற்காக அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கதிரேசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஏற்கனவே இந்த விவகாரம் குறித்த முந்தைய வழக்கு விசாரணையின் போது நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவரது உடலில் மச்சங்கள், தழும்புகள் போன்றவற்றை அரசு டாக்டர்கள் சரி பார்த்தனர். அந்த சமயத்தில் மதுரை ஐகோர்ட்டு பதிவாளராக நான் பணியாற்றியதால் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே வேறு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்ற பரிந்துரைக்கிறேன் என்று நீதிபதி உத்தரவிட்டார்.