மயில்சாமி மறைவு சமூகத்திற்கே இழப்பு: அஞ்சலி செலுத்திய பின் ரஜினிகாந்த் பேட்டி


மயில்சாமி மறைவு சமூகத்திற்கே இழப்பு:  அஞ்சலி செலுத்திய பின் ரஜினிகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 20 Feb 2023 9:18 AM IST (Updated: 20 Feb 2023 10:18 AM IST)
t-max-icont-min-icon

விவேக், மயில்சாமி போன்ற நடிகர்களின் மறைவு சமூகத்திற்கே இழப்பு என்றும் மயில்சாமியின் கடைசியை ஆசையை நிறைவேற்றுவேன் என அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை,

தமிழ் திரை உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் மயில்சாமி. இவர் சென்னை சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வண்டலூர் அருகே உள்ள மேலக்கோட்டையூர் சிவன் கோவிலில் நடந்த சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு விட்டு நேற்று அதிகாலை 3 மணி அளவில் வீடு திரும்பினார்.

அப்போது மயில்சாமிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கினார். குடும்பத்தினர் உடனடியாக அவரை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மயில்சாமியை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் குடும்பத்தினர் கதறி அழுதனர். அவருக்கு வயது 57.

மயில்சாமி மறைவு திரை உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. மயில்சாமி உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரை உலகினர் அஞ்சலி செலுத்தினர்.

இந்தநிலையில், மாரடைப்பால் இறந்த மயில்சாமியின் உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மயில்சாமியின் குடும்ப்பதினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

எம்ஜி.ஆரின் தீவிர ரசிகர், சிவனின் அதி தீவிர பக்தர் மயில்சாமி. மயில்சாமி என்னுடைய நெடுங்கால நண்பர். கடந்தமுறை மயில்சாமி என்னை போனில் தொடர்பு கொண்ட போது என்னால் பேச இயலவில்லை. ஒவ்வொருமுறை கார்த்திகை தீபத்தின் போது திருவண்ணாமலையில் இருந்து எனக்கு போன் செய்வார்.

மயில்சாமி சிவராத்திரி அன்று இறந்தது தற்செயல் கிடையாது. அது சிவனின் கணக்கு. தன்னுடைய தீவிர பக்தரை சிவராத்திரி அன்று சிவபெருமான் அழைத்து சென்று விட்டார். சிவன் கோவிலில் நான் பால் அபிஷேகம் செய்ய சொல்லியதாக நான் கேள்வி பட்டேன் மயில்சாமியின் கடைசியை ஆசையை நிறைவேற்றுவேன் என்றார். சிவன்கோவில் ரஜினி பால் அபிஷேகம் செய்வதே எனது ஆசை என மயில்சாமி கூறியிருந்த நிலையில் ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை வடபழனி மின்மயானத்தில் மயில்சாமி உடல் இன்னும் சிறிது நேரத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.


Next Story