வீட்டில் வன கிளிகளை வளர்த்த விவகாரத்தில் நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2½ லட்சம் அபராதம்


வீட்டில் வன கிளிகளை வளர்த்த விவகாரத்தில் நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2½ லட்சம் அபராதம்
x

வீட்டில் வன கிளிகளை வளர்த்த விவகாரத்தில் நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2½ லட்சம் அபராதம்.

ஆலந்தூர்,

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் பிரபல நடிகர் ரோபோ சங்கர், தனது வீட்டில் வளர்க்கும் பறவைகள் குறித்து யூடியூப்பில் வீடியோ வெளியானது. அதில் வன கிளிகளான அலெக்சாண்டரியன் வகையை சேர்ந்த 2 கிளிகளை வளர்ப்பது தெரியவந்தது. இது பற்றி கிண்டி வனத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து கடந்த 15-ந் தேதி கிண்டி வனத்துறை அதிகாரிகள் நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் அனுமதியின்றி வனத்தில் மட்டும் வளர்க்கும் கிளிகளை வளர்த்து வருவது தெரிந்தது. அவரது வீட்டில் வளர்த்த 2 கிளிகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், அவற்றை உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர்.

வன கிளிகள் வளர்த்தது தொடர்பாக கிண்டி வனத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். அப்போது நடிகர் ரோபோ சங்கர், அவருடைய மனைவி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதையடுத்து நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறை அதிகாரிகள் ரூ.2½ லட்சம் அபராதம் விதித்தனர்.

இந்த அபராத தொகையை அரசு கருவூலத்தில் செலுத்தி ரசீது நகலை ஒப்படைக்கமாறும் தெரிவித்தனர். மேலும் வீட்டில் வன கிளிகள் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு வீடியோவை வெளியிடவும் வனத்துறை அதிகாரிகள் ரோபோ சங்கரிடம் அறிவுறுத்தினார்கள்.


Next Story