பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி நடிகர் சத்யராஜ் பேச்சு
பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி என நடிகர் சத்யராஜ் கூறினார்.
திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா, தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் விழா, முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 20-ம் ஆண்டு தொடக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. கல்லூரி பேராசிரியர் செல்லப்பா தலைமை தாங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் "என்னம்மா கண்ணு சவுக்கியமா" என்று தன்னுடைய ஸ்டைலில் பேச ஆரம்பத்தார். தொடர்ந்து அவர் பேசும்போது, பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் இன்று சவுக்கியம் என்று கூறுவதற்கு காரணம் தந்தை பெரியார் தான். அநீதியை பார்த்து கோவப்படுபவர்கள் யாவரும் என் நண்பர்கள் என்று புரட்சியாளர் சேகுவாரா கூறுவார். பெரியார் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் திருச்சியில் தான் எடுத்தோம். எனவே நான் இதை பெருமையாக கருதுகிறேன். பெரியாருடைய பிறந்தநாளை சமூக நீதி நாள் என்று அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. பெரியார் என்பவர் ஒரு சிலை அல்ல அவர் ஒரு தத்துவம் அவர் ஒரு கோட்பாடு. பெரியார் ஊரில் முக்கியஸ்தர் என்று சொல்லக்கூடிய குடும்பத்தில் பிறந்தவர். அப்படி இருக்கும் பட்சத்தில் இதை எல்லாம் தூக்கி வீசிவிட்டு சமூக நீதிக்காக வெளியே வந்தவர். திறமையால், நடிப்பால், படிப்பால் தாழ்ந்தவன் என்ற சொல் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பிறப்பால் தாழ்ந்தவன் என்று சொல்வதில் என்ன நியாயம் என்றார். விழாவில் கல்லூரி முதல்வர் சுகந்தி, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், முன்னாள் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.