வாழ்க்கையை சீரழிக்கக்கூடிய சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடாது மாணவர்களுக்கு நடிகர் தாமு அறிவுறுத்தல்
வாழ்க்கையை சீரழிக்கக் கூடிய சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடாது என மாணவர்களுக்கு நடிகர் தாமு அறிவுறுத்தியுள்ளார்.
தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து கடலூர் மாவட்டமாக பிரிந்து 30 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக "கடலூர் 30" என்ற தலைப்பில் சில்வர் பீச்சில் "நெய்தல் புத்தக திருவிழா'' 11 நாட்கள் நடத்த திட்டமிட்டு, கடந்த 29-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 8-வது நாள் விழா நேற்று நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர்.
இதையடுத்து காலை 11 மணிக்கு கருத்தரங்கம் தொடங்கியது. இதில் நடிகர் தாமு கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 'தேர்வை கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர், மாணவ-மாணவிகள் அனைவருக்கும் ஒழுக்கம் தான் முக்கியம். பள்ளி பருவத்திலேயே மாணவர்கள், மூளையை பாதிக்கக்கூடிய கஞ்சாவுக்கு அடிமையாகி வருகின்றனர். அதனால் வாழ்க்கையை சீர்குலைக்கும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது.
ஆசிரியர்களை மதிக்க வேண்டும்
மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய ஆசிரியர்களை மதிக்க வேண்டும். மாணவர்களின் மனதை தூசி தட்டி முன்னேற்ற பாதைக்கு தயார் படுத்துவது ஆசிரியர்கள் தான். மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கக் கூடிய சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடாது. அதில் இருந்து மாணவர்கள் வெளியே வர வேண்டும்.
நடிகர்- நடிகைகளின் பதாகைகளுக்கு பால் அபிஷேகம் செய்வது, அவர்களுக்காக தவமாய் காத்து கிடப்பது ஏதும் வாழ்க்கைக்கு பயன் தராது. அதனால் உங்கள் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். படங்களில் சிகரெட் பிடிப்பது மற்றும் மதுபானம் அருந்துவதை நம்பி மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லக்கூடாது என்றார்.
அப்போது பெற்றோா் படும்பாடுகளை ஒவ்வொருவரும் நினைத்து பார்க்க வேண்டும். மேலும் அவர்கள் எப்படி கஷ்டப்பட்டு வளர்த்து, ஆளாக்கி இருக்கிறார்கள் என்பதை குழந்தை பிறப்பு முதல் படிக்க வைத்து வருவது வரை பெற்றோர் படும்பாடு குறித்து விரிவாக விளக்கி பேசினார். இதை கேட்ட ஏராளமான மாணவிகள் தேம்பி, தேம்பி அழுதனர். உடனே அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவிகளை சமாதானப்படுத்தினர். இதில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.